Wednesday, October 31, 2007

நிழலாடும் நிஜம்




மைகொண்டு புருவத்தைத்
தீட்டுவது போல் - உன்
விழிகொண்டு எனது இதயத்தைத்
தீட்டுகின்றாய்...

பூக்களின் வாசத்தை நுகர்ந்த
என் நாசி இன்று உன்
வியர்வையின் வாசத்தை
நுகர்கின்றது...

சாக்கடை நாற்றம் கூட
ரோஜா வாசத்தைத் தாங்கி
வருகின்றது உன்னோடு
நான் இருக்கையில்...

மாலைக் காற்று
காலைக் காற்றோடு
கைகோர்த்து வருகின்றது
உனக்கு துதிபாட...

தொலைக்காட்சியில் மூழ்கின்றேன்
காணும் பாடல் காட்சிகள்
அனைத்திலும் நீயும் நானும்....

கனவில் சுற்றுகின்றோம்
அகிலம் முழுதும்
நிழல் ஒர் நாளில்
நிஜமாகும் என்ற ஆசையில்
கனவு கலைந்து உன்னை
என்னுள் புதைக்கின்றேன்
நிஜத்தில்...

உன் குரல் கேட்டதில் இருந்து
என் குரல் கேட்க வில்லை
எனக்கு....

உன் உருவம் கண்டதில் இருந்து
வேறு உருவம் காட்டவில்லை
என் கண்கள் எனக்கு...

உன்னைத் தவிர மற்றவைகள்
அனைத்தும் குருடன் பார்வையில்
கலர்ப் படமாய் தோன்றுகிறது....

என் நிழலில் கூட - உன்
நிழல் நிழலாடுகின்றது...

என் நிஜத்தில் - உன்
நிஜம் நிந்திக்கின்றது...

கடலில் கலந்த மழைத்துளியாய்

இனியவள்

அன்பெனும் நீர் தெளித்து
மனம் என்னும் நிலத்தில்
காதல் கோலம் போட்டு விட்டாய்
அழகாய்...

அழகுக்குள் ஒர் அழகாய்
உன் காதல் என்னை
அழகுபடுத்த ஆர்பாரித்து நிற்கின்றேன்
கடலலைகள் போல்...

உன் காதல் மாற்றியது
இவ்வுலகை அழகாய் - என்
கண்களுக்கு மட்டும்
மீனாய் நீந்தி திரிந்தேன்
உன் அன்பெனும் கடலில்...

முத்தாய் கொட்டும் உன்
சிரிப்பை அள்ளிக் கோர்த்தேன்
மாலையாய்..

மாலைச்சூரியன் நிலவைப்
பரிசளித்துச் சென்றுவிட
ஆனந்தக் குக்கூரலிட்டன
விண்மீன்கள் குளிர்ச்சியில்...

நிலவின் ஒளியில்
உன் நினைவின்
துணையில் இரவின்
தனிமையில் இன்றைய
நினைவுகளை கவிதை
புனைந்து கொண்டிருந்தன
மனம்...

காற்றுக்கு கூட வேலி போட முடியும்
அன்பே ஆனால் உன் நினைவுகளுக்கு
வேலிபோட முடியவில்லையே...

ஆழ்ந்த உறக்கத்தில் கூட
சிரிக்கின்றேன் ஆழமாய் உற்று
நோக்கினேன் என்னுள் - நீ
இரண்டறக் கலந்து விட்டாய்
கடல்நீரில் கலந்து விட்ட
மழைத்துளியாய்...

அன்புத் தோழி

இனியவள்

காற்றடித்தால் கலைந்து போய்
பின் சேர்ந்து கொள்ளும் மேகம்
போன்றதல்ல எம் நட்பு..

ஒரு முறை போனால் திரும்பவும்
உடலோடு வந்து சேராத
உயிரைப் போன்றது
எம் நட்பு..

என் கோபத்தில் கூட துளிர்க்கிறது
உன் மேலான என் அன்பு
இரு கரங்கள் கொண்டு
பிண்ணிப் பிணைக்கப்பட்ட
இரு இதயங்களின்
வார்த்தைப் பரிமாறல்
எம் நட்பு...

உன் மனதினை நோகடிப்பவர்களை
நான் விரட்டுக்கின்றேன்
என் மனதில் இருந்து
என் உறவாய் இருந்தாலும்
இந்தக் கோபம் வேண்டாம்
என்கின்றாய் நீ அடிப் போடி
என் கோபமே உன் மேலான
அன்பின் நிமித்தம்
உருவானதல்லவா...

வயது பார்த்து வசதி பார்த்து
உருவம் பார்த்து வந்ததல்ல
எம் நட்பு - என்
கண்கள் உன் உருவத்தை
நேரில் கண்டதில்லை இதுவரை
என் இதயம் ஓவ்வொரு நிமிடமும்
தரிசித்துக் கொண்டிருக்கிறது உன்
அன்பான உருவத்தை
ஒவ்வொரு நொடிப்பொழுதும்...

Tuesday, October 30, 2007

இறுதிவரை இணைவோம்

இனியவள்

கண்கள் கண்டு இதயம் தீண்டும்
காதலைக் காட்டிலும்
இதயம் கண்டு கண்ணைத்
தீண்டும் நட்பு கடவுளை விடச்
சிறந்தது..

என் மனதின் மெளனம் நீயறிவாய்
உன் மனதின் மொழிகள்
நானறிவேன்..

எங்கள் இதயங்கள் பேசிக்கொள்கின்றன
வார்த்தைகள் மெளனிக்கும்
போது...

என் சோகங்களை நீ உள்வாங்கி
சந்தோஷங்களை பரிசளித்தாய்..

உன் வாழ்வின் இனிமைகள்
என் வாழ்வின் இனிமைகள்...

தென்றல் தழுவும் மலராய்
உன்னை இன்பங்கள்
தழுவட்டும்...

தோழியே என் ஓவ்வோர்
அசைவிலும் உன் விம்பம்....

என் ஆயுளின் கடைசிவரை
எமக்குள் இருக்கும் இந்த
உயிர்ப் பந்தம்.....

உன் கண்களில் கலக்கம் - என்
உயிரினில் நடுக்கம்...

பிரிவென்ற சொல்லை விடுத்து
உயிர் என்ற சொல்லோடு
பிண்ணிப் பிணைவோம்......

Monday, October 29, 2007

இதயம் கண்டதால்

இனியவள்


தென்றலோடு கதைபேசும் 

பூக்கள் காம்பை விட்டு 

உன் கரங்களுக்குள்

புகுந்து கொள்கின்றன

பச்சிலம் பாலகன் போல்

தஞ்சம்..!


என் இதயம் பறக்கத் 

துடிக்கின்றது - உன் 

இதயத்திடம்

தடை போடுகின்றது

என் நாணம்..!


சுகந்தம் வீசும் 

மலர்கள் கூட

நறுமணம் இழந்து

தவிக்கின்றன உன்

கேசத்தின் சுகந்தத்தின்

முன்னால்..!


வானவில்லின் நிறங்களைப் 

பிழிந்து என் வாழ்வை 

வர்ணமயமாக்கி

வானவில்லை நிறமற்றதாய்

மாற்றிச்சென்று விட்டாயடா..!


ஒளிரும் விளக்கில்

உன் முகம் அழுத்த

தயங்குகின்றது விரல்கள்

ஆழியை...


படிக்க நினைத்ததை 

மறந்து பாடித் 

திரிகின்றேன் - உன் 

பல்லவியை..!


பற்றியெரியும் வீடு

தீக்குச்சியாய் தோன்ற

தீக்குச்சி தோன்றுகின்றது

பற்றியெரியும் காடாய்..!


கண்கள் உன்னை 

கண்டதால் - நீ 

என் இதயத்துக்குள் 

நுழையவில்லை

இதயம் உன்னைக் 

கண்டதால் கண்களுக்குள் 

நுழைந்து கொண்டாய்..!

இரவு நேர நினைவு


அமைதியான 

இரவு நேரம்

கண் சிமிட்டும் 

நட்சத்திரங்கள் குளிர்ச்சியான 

வெளிச்சத்தை பாய்ச்சி 

கொண்டிருக்கும் நிலவு

இந்த ரம்மியமான

இரவுப் பொழுதை

குலைத்து கொண்டிருந்தன

நாய்களின் ஈனக் குரல்கள்..!


வானத்து நட்சத்திரங்கள்

தமது ஜோடிகளை தேடி

நகர்ந்து கொண்டிருந்த வேளை

என் மனதும் அவனது நினைவுகளை

காவியமாக்க ஒன்றின் மேல் ஒன்றாக

அடுக்கிக் கொண்டிருந்தன

நினைவுப்படிகளை..!


இரவு நேர தென்றல் காற்று

அவனது மூச்சுக் 

காற்றை ஞாபகப்படுத்த 

தவழ்ந்து வரும்

குழந்தையை 

அரவணைக்கும் அன்னை போல் 

நினைவுகள் - என்

இதயத்தை அரவணைத்துக்

கொண்டன..!


வெட்ட வெளியாய் - இரவுநேர

வானத்தை நட்சத்திரங்கள்

அலங்கரிப்பது போல்

என் மனதை அவன் நினைவுகள்

அலங்கரித்துக்

கொண்டிருந்தன..!


தூக்கம் கண்களை

அரவணைக்கவில்லை துக்கம்

என் இதயத்தை அரவணைத்துக்

கொண்டது..!


கண்களை மூடினால் 

அவன் நினைவலைகளே

கண்களில் நிழலாட

மூடிய விழிகள் திறந்து

கொண்டன..!


திறந்த விழிகள்

திறந்த படியே ஏதோ

ஒன்றை எதிர் பார்த்து

காத்துக் கொண்டிருந்தன..!

நிஜம் வலிக்கின்றது..!!

இனியவள்

உயிரைக் கேடயமாக்கி
கண்ணைக் காக்கும் 
இமைபோல் இரவு பகலாய் 
என்னை அரவணைத்தாய்
காற்றுக் கூட 
என்னைத் தீண்டாமல்..!

ஊமையானாய் வார்த்தைகளை 
மெளனமாக்கி எனக்காக 
கண்ணிமைகளை சாமரமாக்கி
எனக்கு வியர்க்காது வீசினாய்
நிலம் போல் தாங்கினாய்
நிலவு போல் குளிர்வித்தாய்
வைரம் போல் ஜொலிக்க
வைத்தாய் கனவிலும்
நீ..!

உன் நினைவை வாழ்வாக்கி
கனவை துணையாக்கி விட்டு
கரம் மாறி கைப்பிடித்து
இன்று எனை தவிக்கவிட்டு
சென்று விட்டாயே..!

அன்றைய நினைவு 
தேனாய் இனிக்கின்றது
இன்றைய நிஜம் அனலாய்
சுடுகின்றதே
எல்லாம் நான்
என் காதலை
மறைத்ததாலா..!

தத்தளிக்கும் ஓடம்

இனியவள்

முட்களாய் நீ என்னைக்
குத்த மலராய் - உன்
நினைவுகள் என்னை
வருடிச் செல்கின்றன...!

காதல் என்னும் வானத்தில்
நிலவாய் ஜொலிக்கும் 
உன்னை

அடைய காற்றை நூலாக்கி

விரைகின்றேன் உன் கரம் பிடிக்க
மின்னலாய் வந்து அறுத்தெறிந்து
செல்கின்றாய் என்னை..!

மேகமாய் இருக்கும் என் சோகத்தை
காற்றாய் மாறி கலைப்பாயென நானிருக்க
இயற்கையில் இருக்கும் பசுமைபோல்
நிலைக்கச் செய்து விட்டாயே
சோகத்தை என்னுள்...!

உன் பிரிவை மறக்க கவிதை
என்னும் விதையை என்னுள்
விதைத்தேன் மரமாய் வளர்ந்தது
கவிதை மட்டுமல்ல உன்னால்
ஏற்பட்ட ரணங்களும் தான்...!

நினைவை மறக்க நிழலை
என்னுள் திணித்தேன் − நிழலே
உன் உருவமாய் நிழலாட
என் உயிர் ஓடமாய் தத்தளிக்கின்றது
நடுக்கடலிலே....!

Sunday, October 28, 2007

என்னுள் உன் ஆக்கிரமிப்பு

இனியவள்

என் தனிமையை 

விரட்டிய - உன் 

நினைவை உன் 

கண்கள் தழுவிய

என் இளமையை

உன் இதயம் 

ஆக்கிரமித்த என் 

இதயத்தை - உன் 

உயிர் உள்வாங்கிய

என் உயிரை

வேறொருவன் தீண்ட

நான் எப்படி

அனுமதிப்பேன்

அன்பே..!

இரு தலைக்கொல்லி

இனியவள்

முடிவில்லா வானம் 

போல் முடியவில்லை 

நான் போகும்

வாழ்க்கைப் பாதை..!


காற்றைச் சுவாசிக்க 

வெறுக்கின்றேன் - உன் 

மூச்சுக் காற்றையும் 

தாங்கி

வருவதால்..!


கண்கள் காணும் 

காட்சிகள் அனைத்திலும் 

உன் விம்பம் காணுவதால்

கண் மூடிவாழ

முயற்சிக்கின்றேன்..!


இருளில் ஒளியாய் மூடிய

விழிகளுக்குள் கள்ளமாய்ச்

சிரிக்கும் உன் விம்பம் - என்

சிந்தையைக் கலைக்கின்றது..!


விழிகளை மூடவும் 

முடியாமல் திறக்கவும் 

முடியாமல் தவிக்கின்றேன்

ஒரு தலைக்கொல்லி 

எறும்பாய்..

இரவு நேர நிலவு..!

இனியவள்

நினைவுக் குழந்தைகள்
கண்திறக்கின்றன 
தனிமையின் 
இனிமைகளில் 
திளைத்திட..!

சூரியனை தரிசித்திட 
தென்றலை அரவணைக்கின்றன 
விரியா மொட்டுக்கள் 
நாளை மலர்ந்திட
தூக்கத்தை வாரி 
அணைக்கின்றேன்
நாளை விடிந்திடும் 
விடியலில் உன்னை 
நான் காண்பதற்காய்..!

சூரியன் ஓளியினில் 
மின்னிடும் பனித்துளியாய்
உன் மீதான காதல் கொண்டு 
ஜொலிக்கின்றேன்
இரவு நேர 
வெண்ணிலவாய்..!

வலிகளின் கதறல்கள்..!

இனியவள்

நிசப்தத்தில் 
தொலைத்து
விட்டேன் 
என் இன்னிசையை..!

ஒளியில் இருள் தேடி
இருளில் ஒளி தேடியே
தொலைத்து விட்டேன்
மீண்டும் செல்ல முடியாத
இறந்த காலத்தில்...!

சிந்தித்து சிந்தித்து
சிதறிய அறிவுக்
களஞ்சியமல்ல - என்
கவிதைகள்...!

மனதை அழுத்தி
உயிரை உறிஞ்சிக்
கொண்டிருக்கும் 
வலிகளின்
கதறல்கள்..!

Saturday, October 27, 2007

காதலின் கல்லறையிலே..!

இனியவள்

கடிகார முற்களின்
சுழற்சியில் சுற்றிக்
கொண்டிருக்கிறது
என் காதலோடு சேர்ந்த
கனவுகளும்..!

வலிகளெனும் மேகங்கள்
மழையாய் கரைந்தோட
இரவு நேர நட்சத்திரமாய்
ஜொலித்தேன் ஒற்றைக்
காதல் வானிலே..!

உன் கன்னக் குழியில்
தொலைத்து விட்டேன்
என் தொலை தூரப்
பார்வையை...!

உன் நினைவுகளின்
துணை கொண்டு 
தேடித் தேடி அலைகின்றேன் 
நான் தொலைத்த காலடிச்
சுவடுகளை..!

தேடல்கள் தொடர
என் வாழ்க்கைப்
பயணம் பயணிக்கின்றது
மரணித்து விட்ட 
என் காதலின் 
கல்லறையிலே..!

உன்னிடம்

இனியவள்

தேனிருக்கும் வரை
வண்டின் நாட்டம்
பூவிடம்...

இரவிருக்கும் வரை
நிலவின் இருப்பிடம்
வானிடம்...

தனிமையிருக்கும் வரை
வெறுமையின் இருப்பிடம்
மனதிடம்...

இன்பமிருக்கும் வரை
புன்னகையின் இருப்பிடம்
இதழிடம்...

துன்பமிருக்கும் வரை
வலிகளின் இருப்பிடம்
கண்களிடம்....

கற்பனையிருக்கும் வரை
கனவுகளின் இருப்பிடம்
தூக்கத்திடம்....

காதலிருக்கும் வரை
என் உயிரின் இருப்பிடம்
உன்னிடம்.....

ஜ மிஸ் யூ

இனியவள்

மரத்தில் இருந்து
உதிர்ந்திடும் இலைகளை
நினைத்து மரங்கள்
வாடுவதில்லை...

மேகங்கள் மழையாய்
மாறுவதால் வானங்கள்
அழுவதில்லை...

சூரியன் ஓரு
பொழுது மறைவதால்
பூமி சுற்றுவதை
நிறுத்துவதில்லை..

ஆனால் ஏனோ - உன்னை
காணாமல் என் இதயம்
துடிப்பை நிறுத்துகின்றது....

Friday, October 26, 2007

உன்னால்

இனியவள்
இறக்கையில்லாமல் பறக்கத்
துடித்திடும் உயிர்களின்
மத்தியிலே இறக்கையிருந்தும்
பறக்க மனமின்றி வாழ்கின்றேன்
உன்னால்...

மலர்களின் நடுவினிலே
மலராய் இருந்த நான்
வாசம் இழந்து அண்டை
நாட்டு அகதி போல்
அலைகின்றேன் உன்னால்...

மரங்களைக் குளிப்பாட்டி
பொலிவுற விளையும்
மழையாய் உன்னை என்
அன்பெனும் மழையினில்
நனைத்து புதிய மனிதனாய்
மாற்றிய எனக்கு -இன்று
நீ புதியவனாய் தோன்றியதால்
அன்பின்றித் தவிக்கின்றேன்
உன்னால்....

மேகத்தின் பஞ்சனையில்
துயில் கொள்ள பறந்திடும்
பறவையாய் உன் இதயமெனும்
பஞ்சனையில் அடைக்கலம்
பெறத் துடித்த நான் - இதயம்
இழந்து துடிக்கின்றேன்
உன்னால்...

ஆனந்த மழையினிலே
என்னைக் குளிப்பாட்டிய
உன் வருகைகள் - என்னை
கண்ணீர் மழையில் நனைய
வைக்கின்றதே - கண்ணீரின்
நிழல் கூட அறியாது இருந்த
என் கண்கள் கண்ணீர் மழை
பொழிகின்றதே உன்னால்...

இதயத்தின் விசும்பல்கள்

இனியவள்

மணலிலே வரைந்திட்ட
ஓவியம் காற்றாலே
கலைவதைப் போல்
கலைந்து போனது - என்
கனவுகளும் நீயும் நிழலாய்
போனதால்....

தரையை முத்தமிட
மீண்டும் மீண்டும்
அலைகள் வருவதைப்போல் - என்
அன்பைப் பெற அலைகடலாய்
சுற்றிச் சுற்றி நீ வந்த காலங்கள்
கரைந்தோடிப் போகின்றது
இதழ் நனைக்கும் கண்ணீரிலே.....

இதயத்தின் விசும்பல்கள்
உயிர் வரை சென்று
உயிர் தொலைத்து வருகின்றது...

மணித்தியாலங்களின் நிமிடங்கள்
கரைந்தோடிச் செல்ல - நிமிடங்களில்
கரைந்தோடுகின்றது நிஜங்களோடு
கலந்தோடும் நினைவுகள்...

கண் பார்வையில்

இனியவள்

காதலெனும் செடியில்
அன்பெனும் மலரைத்
தந்து உயிரெனும் வேரைப்
பிடுங்கிச் செல்கின்றாய்...

நினைவுகள் என்னை
அணைக்க கவிதைகளை
நான் அணைத்துக்
கொள்கின்றேன்....

கண் பார்வையில் இருந்து
விலக்கிய உன்னை
என் உயிர்ப் பார்வைதனில்
இருந்து அகற்ற முடியாமல்
துடிக்கின்றேன்.....

இரத்தோட்டமாய்..!!




என் இதயம் வரைவது 
உன் பெயரை 
உன் பெயருக்குள் இருப்பதோ 
என் பெயர் - இருவருக்குமோ
செல்லப் பெயர்
ஒன்றே..!

ஓவ்வொரு நாளும் - நம் 
பெயரை மீள் பதிவு 
செய்கின்றேன் - என் 
இதயத்துக்குள்.., 
அந் நொடியில் இருந்து 
என் இதயம் 
புத்துயிர் பெற்றுத் 
துடிக்கின்றது 
வேக வேகமாய்..! 

வரைந்து வரைந்து 
வர்ணங்கள் இழக்கின்றேன்
நம் பெயரை.., 
இழந்த வர்ணங்களை 
வானவில்லாய் 
மீட்டுத் தருகின்றதே - உன்  
உதட்டோர புன்னகை...! 

நம் பெயர் என்
நெஞ்சோடு
இருக்கும் வரை
உன் நினைவுகளே 
இரத்தோட்டமாய் 
பரவுகின்றது - என் 
நாடி நரம்பெங்கும்..!

Thursday, October 25, 2007

உன் தீண்டலுக்காய்...


என் மனதின் எண்ணங்களை
நீ படிப்பதற்காய் வரைகின்றேன்
கவிதைகள் பல...

என் கவிதையின் பிரதிபலிப்பு
உன் கண்கள் தீண்டா என் கண்கள்
உன் இதயம் கண்ட என் இதயம்
என் உயிருக்குள் வசிக்க
மறுக்கின்றது...

உனக்காய் நான் படைத்திட்ட
காவியங்கள் காத்துக் கிடக்கின்றன
உன் தீண்டலுக்காய்..

ஓரு முறை நோக்கி உயிர்
கொடுத்துச் சென்று விடு என்
கவிதைப் பூக்களுக்கு....

Wednesday, October 24, 2007

உன் காதல்

இனியவள்
கண்கள் உன்னைக்
கண்ட நொடி உலகமே
என் காலடியில் விழுந்து
கிடப்பதாய் எனக்குள்ளே
ஒரு பிரமிப்பு......


உன் இதயம் என்னும்
மாளிகையை ஆக்கிரமித்து
குடி கொண்டிருக்கும்
ராணி நான்
என் இதயம் என்னும்
மாளிக்கையை ஆக்கிரமித்து
குடி கொண்டிருக்கும் என்
தேவ தூதன் நீ.....


என் கண்களை - உன்
கண்கள் நோக்கும்
அந்த நொடிப் பொழுது
இந்தஓரு நொடிக்காகத்
தான்ஒரு யுகம்
காத்திருந்ததைப் போன்ற
ஒரு பிரமிப்பு - இனி
என் வாழ்வு உன்னுடனே
உன் வாழ்வு என்னுடனே
இதயங்களை பரிமாறிக் கொண்டோம்
சோகங்களை இதழ் மாற்றிக் கொண்டோம்
இன்பங்களை பரிமாறிக் கொண்டோம்
என் கனவுகள் உன் நினைவாகவே
உன்னோடு நான் வாழ்ந்த
காலம் என் நினைவு என்னும்
பெட்டகத்தில் உயிரினால்

பூட்டப்பட்டு காவல் காக்கப்படுகின்றது...

இனியவள்

அன்பின் சுகம்

இனியவள்

நிலவின் குளிர்ச்சியை
உன் முகத்தில்
நான் கண்டேன்...

இசையின் இனிமையை
உன் பேச்சில்
நான் கேட்டேன்....

பூவின் நறுமணத்தை
உன் வியர்வையில்
நான் நுகர்ந்தேன்...

அன்பின் சுகத்தை
உன் அரவணைப்பில்
உணர்ந்தேன்...

உன் பிரிவு

இனியவள்

இனிமை தந்த
இரவு இன்று 
வேதனையாக..,
கனவு தந்த 
தூக்கம் இன்று
சந்தோசத்தையே
கலைக்கின்றது..!

உன் காட்சியே 
கோலமாய் இருந்த 
கண்கள் இன்று
கண்ணீர் கோலமாய்..,
தென்றலாய் இருந்த
என் மனம் - அன்று 
உன் மனதில் 
வேறொருவர் என 
அறிந்த நாள் 
முதலாய் -என் 
மனம் ரணமானதே..!

உன் திசையை 
நோக்கி பயணித்த 
என் கால்கள்
மரணத்தை நோக்கி
செல்லாதா..,
எனக்குள்ளே
எழுந்த முதல்
காதலும் நீயே
முடிவில்லா காதலும்
நீயே..!

!! பிரிவின் வேதனை !!



தேனமுதம் தந்த
உன் மேலான பார்வை
இன்று முள்ளாய் மாறி
என் இதயத்தைக் 
குத்திக் குத்தி 
கிழிக்கின்றது..!

என் கூட வரும் நிழல்
இன்று உன் பிரிவு
தந்த வலியால்
உதிரம் கொட்டுதடா..!

அனல் கக்கும் 
சூரியன் பனியாய் 
உருகினான் - நான் 
உன் அருகாமை
வீட்டில்
இருக்கும் போது
உன் பெயரை
அழைத்தால் நான்
என்னையே என
ஏமாந்த காலம் 
அப்போதே என் 
காதலும்
உதயமானதே..!

அன்று குளிராய் 
வந்து தழுவிய
தென்றல் கூட 
இன்று அனலாய் 
சுடுகின்றதடா
நான் உன்னை விட்டு
விலகிய பின்..!

நிஜத்திலே உண்டான
உன்மீதான 
ஒருதலை பட்ச 
காதல் இன்பத்தை 
அனுபவித்த நான் 
பிரிதலினால் உண்டான
வேதனையை தாங்க 
முடியாமல் - நெருப்பில் 
விழுந்த புழுவாய்
துடிக்கின்றேனே..!

!! பீனிக்ஸ் !!

இனியவள்

தீயிலோ பொசுக்குகின்றேன்
உன் நினைவுகளை - ஆனாலும்
பீனிக்ஸ் பறவை போல்
உயிர்க்கின்றது..!

நீரிலே புதைக்கின்றேன்
பந்தாய் மேலுழுகின்றது
உன் நினைவுகளை
தொலைக்கும் வழி
தெரியாமல் 
தவிக்கின்றேன்..!

உன்னால் என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்..!

இனியவள்

கடல் நீராய்
இருந்த என்னை
மழை நீராய்
மாற்றினாய்..!

நனவாய் இருந்த
என் ஆசைகளை
கனவாய் 
மாற்றினாய்..!

நானாய் இருந்த
என்னை நீயாய்
மாற்றினாய்..!

சோக கீதமாய் 
இருந்த -என் 
நினைவுகளை
இனிய கீதமாய்
மாற்றினாய்..!

புயலாய் இருந்த
என் வாழ்வை
தென்றலாய் 
மாற்றினாய்..!

காதல் என்ற 
நீருற்றை என்னுள் 
ஊற்றி பசுமையை 
என்னுள் விதைத்து
விட்டாய்..!

புதையல்..!

இனியவள்

உன்னுடைய 
சிரிப்புகளை எல்லாம்
சேமித்து அழியாத
குடுவையில் அடைத்து
ஆழமாய் புதைக்க
வேண்டும் - எதிர்கால 
சந்ததிக்கும்
ஏதேனும் புதையல்
வேண்டுமல்லவா..!

என் முதல் கனவே..!!


அன்பே...தென்றலாய் 

வந்து இதமாய் 

கடந்து சென்றாய்... 

புயலின் தாக்கத்தை 

விட்டுச்

செல்கின்றாய்..!


வெளிச்சப் புள்ளியாய் 

தோன்றி மெழுகாய் 

ஒளி தந்து 

கடந்தாய்... 

ஒரு மின்னலின் 

அதிர்வை பதிந்து 

செல்கின்றாய்..!


ஒற்றை மலராகவே 

வந்தாய் அழகிய 

பூந்தோட்டமாய் நறுமணம் 

கமழ்கின்றாய்

எப்படி என்னுள் 

நுழைந்தாய்..!


நானே அறியாத 

ஒரு கணத்தில்... 

பகல் வானம் போல் 

வெறுமையாய் இருந்த 

என்னில் - இரவு 

வான் நட்சத்திரங்களாய் 

உன் நினைவை 

விதைத்து விட்டாய்..!


உன் ஞாபக அலைகள் 

சிறு தூறலாக 

துளிர்த்து அருவியாய் 

ஆர்ப்பரிக்கின்றது

யார் நீ...! 


உன்னைச் 

சொல்லாமலேயே 

என்னைக் 

கொல்கின்றாய்

என் முதல் கனவே..!

எப்பொழுது உன்னைக் காதலிக்கத் தொடங்கினேன்..!!

இனியவள்

காதல் அத்தனை
சோகத்தையும் 
துடைக்கும் ஒற்றைக் 
கைக்குட்டை..!

காதல் அத்தனை
கைக்குட்டைகளையும் 
நனைக்கும்
ஒற்றைச் சோகம்..!

உனது சிரிப்பை
மொழி பெயர்க்கும்
கலை வாய்த்திருந்தால்
ஆயிரம் கவிதைத்
தொகுதிகள் 
போட்டிருப்பேன்..!

விழித்துவிட கூடாதே
எனும் நினைப்பில்
தூங்கப் போகிறேன்
தூங்கவே விடாமல்
விழிக்கின்றன 
உன் நினைவுகள்..!

பிரசுரத்துக்கு அனுப்பாத
முத்தம் ஒன்று 
என்னிடம் காத்திருக்கிறது
உன் இதழ்களில் 
பிரசுரிக்கும் ஆசையுடன்..!

அதிகாலைக் 
கதிரவனும்..
கை நீட்டும் 
கடலலையும்..
மனம் நனைக்கும்
மழைச்சாரலும்.. 
கவிதை வான் 
வெளியும் - இவை
எதையும் விட 
அழகானவன்
நீயென்று தோன்றிய
தருணத்தில் - நான்
உனைக் காதலிக்கத்
துவங்கியிருக்கலாம்..!

!! யார் வரவுக்காக !!

இனியவள்

முகில்களை போர்வையாக்கி
உறக்கம் கொள்ளத்
துடித்த சூரியக் கதிர்கள்
மறைந்து மழைத்துளிகள்
விரைகின்றன - நிலவின்
கறையைத் துடைக்க..!

நிலவின் மடியில்
இரவுதுயில் கொள்ள 
தென்றல் துணை கொண்டு 
இலைகள் வெண்சாமரம் 
வீசுகின்றன - உலகமே உறங்க
உறங்கா விழியுடன் 
இதயத்தின் வலியுடன்
ஓர் ஜீவன் துயில்
கலைந்து வாழ்விழந்து
காத்திக் கிடக்கின்றது
யார் வரவுக்காகவோ..!

ஆயுள் ரேகை..!

இனியவள்

நான் உனைப் 
பிரிந்து போகையில்
உறைந்து போனது
என் இரத்தம் - ஆனாலும்
உறையாத உன் 
நினைவுகளால் 
இன்னும் இயங்கிக் 
கொண்டிருக்கிறது
என் இதயம்..!

காதல்..!!




காதல் அது 
என்னோடு நீ 
இருக்கும் வரை
உன்னிடம் இழந்த - காதல் 
எனக்கு அது
இனிமை...!

உன்னை விட்டு - நான் 
பிரியும் போது
என்னை மரணிக்க 
வைத்த
காதல் விஷம் - உன்
ஜாபகங்கள்..!

!! காதல் தேசம் !!

இனியவள்

என் குருதிக்குள் 
அணுவாய்
கலந்திருப்பவனே
என் விழிகளை - நீ
ஆட்சி செய்வது அறியாமல்
உன்னை தேடித் தேடி
அலைகின்றேன் 
சூரியனைத் தேடும் 
தாமரையாய்..!

அன்னையின் அன்பில்
உலகை மறந்து 
கிணற்றுத் தவளை போல் 
வேற்றுலகைப் பாராமல் 
அன்னையே உலகென
நினைத்திருந்தவளை 
காதல் எனும் 
பூங்காவனத்திற்கு
அழைத்து வந்த 
தேவதூதன் நீ - என்றும் 
ஜீவன் எனக்கு நீ..!

காற்றில் தவழ்ந்து 
கடலில் மிதந்து
காதல் என்னும் 
தேசம் தேடி
போகின்றேன்
உடலாய் இருக்கும் 
உன்னிடம் - உயிராய் 
வந்து கலந்திட..!

தியாகத்தின் திலகமாய் 
திகழ்ந்த அன்னையின் 
அன்பில் உலகை
மறந்திருந்த நான் 
உன் மீதான
காதலினால்
அன்னையையே மறந்து
காதல் என்னும் 
பூவில் அன்பென்னும் 
தேன் அருந்துகின்றேன்..!

வானத்தின் உச்சியில் 
மிதக்கின்றேன் - உன்னால்
சென்று விடாதே 
எனை மறந்து
விழுந்திடுவேன்
சிறகொடிந்த 
பறவையாய்..!

உன் புன்னகை !



உன் பூவிதழ் புன்னகை
கண்டு மலர்கின்றது
என் கண்கள் - சூரியனைக்
கண்ட தாமரையாய்..!

உன் புன்னகை
காணாமல் வாடிய
மலர்கள் கூட
துளிர்க்கின்றன - உன்
உதட்டோரத்தில் துளிர்விட்ட
புன்னகையை கண்டு..!

உன் புன்னகை கண்டு
பொறாமை கொண்ட
சந்திரன் மறைந்து
கொள்கின்றான் 
முகில்களின் இடைநடுவில்..!

என் கண்கள் கண்ட
அழகிய காட்சி உன்
புன்சிரிப்பு
என் உயிர் தொட்ட 
உயிர் உன் புன்னகை 
என்றும் இருக்கட்டும் 
உன்னோடு..!

மலரும் மலர்கள் 
அனைத்தும் - உன் 
புன்னகை கண்டு 
மலரட்டும்
மேகங்கள் மழையாய் மாறி
விரைகின்றன - உன் 
புன்னகையை
தரிசித்திட..!

அழகிய இயற்கைக் 
காட்சியாய் - உன் 
புன்னகை கண்டு
பறந்தோடுகின்றது - என்
சோகங்கள் அனைத்தும்..!

!! உயிரின் ஆசை !!

இனியவள்

என்னுயிரே..,
இரவின் தனிமையை 
தவிர்க்க - உன் 
நினைவுகளோடு 
உறவாடுகின்றேன்..!

ஒவ்வொரு இரவும் 
நித்திரைக்கு வழிவிடும் 
போது - நம் பெயரையே 
கடை வார்த்தையாக 
உச்சரிக்கின்றேன்..!

மூடிய விழிகள் மூடியபடியே 
நிரந்தரமாக நான் 
தூங்கிவிட்டால் - நான் 
இறுதியாக உச்சரித்தது 
நம் பெயராகவே 
இருக்கட்டும்..! 

அடுத்த பிறவி 
எனக்கு தேவையில்லை 
என்னுயிர் காற்றிலே கலந்து 
என்றென்றும் உன் 
அருகில் இருப்பேன்..!

உன்னால்..!!

இனியவள்

எல்லா நம்பிக்கைகளும்

உடைத்தெறியப்பட்டு 

ஒவ்வொரு கணங்களும் 

மிகவும் கனமான 

ஏக்கத்துடன் 

தொடர்கிறது 

உன்னால்..!


உண்மையான சந்தோஷத்தை

தொலைத்து - போலியான 

சந்தோஷத்தை

முகத்தில் சுமந்து

அலைகிறேன் 

நாளும்

உன்னால்...!


சலனமில்லாத 

இராத்திரியில் தூக்கத்தை 

தொலைத்து - தினமும் 

தலையணை

நனைக்கிறேன்

உன்னால்..!


அன்பும் அரவணைப்பும்

உறவுகளிடம் 

செத்துப் போன - பின்பும் 

வாழ்கிறேன் எதனால்

உன்னால்..!

காதலனே..!

இனியவள்


அதெப்படி? 
இரவில் என்னை 
உறங்கிப்போக செய்யும் - உன் 
நினைவுகளே காலையில் 
என்னை எழுப்பி விடவும் 
செய்கின்றன...!

உலகில் மற்றவர்கள் எல்லாம் 
எனக்கு உறவு - நீ 
மட்டுமே உயிர்
உலகத்தில் ஒரு முறை மட்டுமே 
நிகழ்ந்து விட்ட 
அதிசயம் உன் பிறப்பு..!

பூமிக்கு நிலாவிடமிருந்தே 
ஒளி கிடைக்கிறது....! 
எனக்கு மட்டும் 
உன்னிடமிருந்து தான் 
கிடைக்கிறது.
உன்னை கை பிடிக்க
வேண்டும் என்ற 
ஆசை எல்லாம் எனக்கு 
அறவே இல்லை... 
நீ சுவாசித்த காற்றை 
பிடிக்க வேண்டும் 
என்ற ஆசை மட்டுமே
என்னிடம்..!

* சுகமான வலி *

இனியவள்


நினைவுச் சிறையினிலே 

சில நிகழ்வுகள்

ஆயுட் கைதியானேன்

நான் - நிஜமாய் 

வலிக்கத்தான்

செய்கிறது..!


இன்பவலி என்பது 

நிச்சயம்

இதுதானா..,

மீட்டிப் பார்

இதய வீணைதனில்

நினைவுத் தந்திகளில்

வரும் நாதம் சோகமாய்

இருந்தாலும்

சுகம் தரும்..!

!! காதல் பயணம் !!

இனியவள்

ஆசை ஆசையாய் 
வாழ்வதற்கு காதல் 
சிறந்த வழியென
உன்னை நான் 
காதலித்தேன்..!

ஆனால் என் அன்பே
அணு அணுவாய்ச் 
சாவதற்கு - காதல் தான் 
சிறந்த வழியென
புரிய வைத்தாய்..!

உன் அன்பை 
இழந்து நான் படும்
 வேதனைகள் போதும்
என் உயிரைக் கேட்டால்
பரிசாகத் தருவேன் -  ஆனால்
என்னுடன் இரண்டறக் கலந்த
உன் இனிமையான 
நினைவுகளை மட்டும் 
தீயில் எரிக்க 
சொல்லாதே..!

!! வலி கொண்ட மெளனங்கள் !!



இரவின் மெளனத்தை 

கலைத்து விடுகிறது 

சலசலக்கும் 

தென்னங்கீற்று..!


ஆழ்கடலின் மெளனத்தை 

கலைத்து விடுகிறது 

ஆர்ப்பரிக்கும் 

அலைகள்...!


பூக்களின் மெளனத்தை 

கலைத்து விடுகிறது 

அவசரக் காற்று.!


எப்போதும் எங்கேனும் 

சில அழகிய 

மெளனங்கள் 

கலைக்கப்படுகின்றன 

அறியாத 

காரணங்களுடன்..!

Tuesday, October 23, 2007

!! காதல் !!

இனியவள்

கண்ணிரிலே 
வாழ்கிறேன்
கனவாகிப் 
போனவனே
உன்னை 
நினைத்து..!

மரணத்தில் 
உன்னை மறக்கலாம் 
என நினைத்தேன்
என்னைக் கொல்ல 
எனக்கு
துணிவில்லை..!

தூக்கத்தில் உன்னை 
மறக்கலாம் - ஆனால்
கனவில் உன்னோடு
கைகோர்க்கும் 
ஞாபகமே - ஒரு
தனி இன்பம்..!

தோற்றாலும் விருப்பப்படும் 
இந்த தெய்வீக 
காதலை மறப்பது 
எப்படி - சிலுவைகளாய் 
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
நான் உயிரோடு
இறந்து விட்டேன்..!
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.