Thursday, November 29, 2007

உன் அழகிய முகம்..!

இனியவள்

தனிமையை போக்க
நிலவை ரசிக்க பார்த்தேன்
அங்கே கண்டது
உன் அழகிய முகம்..!

அதைக் கண்டு
என்னுயிர் துடிக்க - உன்
நினைவே மறுபடியும்
என் இதயத்தை
ஆட்கொண்டது
உன் வதனம்..!

உயிர் துடிக்கின்றது - அன்பே 
நான் உனை நினைப்பது
போன்று நீயும் எனை
நினைப்பாயோ 
தெரியவில்லை 
ஒரு நொடி கூடவா என்
பெயர் கூட உன் ஜாபகம்
வரவில்லை அன்பே..!

கரைத்திட மாட்டாயோ..!

இனியவள்

பூக்கள் தாங்கும்
மழைத்துளியாய்
சோகம் தாங்கிடும் 
மனமே..!

கண்ணீர்த் துளியாய்
கரைத்திட மாட்டாயோ
என் சோகங்களை..!

Wednesday, November 28, 2007

அக்னித் துளிகள்..!!

இனியவள்

நினைக்க நினைக்க
இனித்திடும் கனியல்ல
நினைக்க நினைக்க
கசந்திடும் காதல்
எனது..!

தித்திக்க தித்திக்க
இசைத்திடும் 
இசையல்ல - உன் 
பேச்சு..!

நீயே உலகம் என
நினைத்தேன் அன்பே
உயிரினில் தெளித்திடும்
அக்னித் துளிகள்
அவை..!

நினைவுகளின் நிழல்
எரிமலையென மாறிட
தீயில் விழுந்த மலராய்
கருகிறது என்
இதயமும் - நீ
ஒரு முறையேனும்
திரும்பி பார்க்கமாட்டாயா 
என் அன்பே..!

Tuesday, November 27, 2007

சொந்தமில்லை..!

இனியவள்

கண்ணீர் கூட
சொந்தமில்லை எனக்கு
உன் நினைவுகளைச்
சுமந்து வருவதனால்..!

நீ எனக்கே சொந்தமாவாய் 
என்னையே காதல் 
புரிவாய் - உன்
காதல் மொத்தமும்
எனக்கே என
பூரிப்புடன் இருந்தேன்
ஆனால் என் பெயர் கூட
உன் நினைவில் இல்லாமல்
எனை தவிக்க விட்டாயே
அன்பே..!

Sunday, November 25, 2007

தனிமை..!



உலகமே நீயென
இருந்த என்னை
உலகத்தை விட்டு 
தூரமாக்கி - என் 
கண்களில் கண்ணீரை 
நிரந்தரமாக்கி 
வாழ்வில் வெறுமையை
பரிசளித்து - உயிரை 
பறித்து உடலை 
மட்டும் தனியே 
தவிக்க விட்டு
சென்றது ஏனடா..!

இதற்கு பெயர் தான் காதலா..!



இரு மின்னல்களும்
ஒன்றையொன்று 
உரசும் போது ஏற்படும் 
ஒளி போன்று
அவன் கண்கள் 
என் கண்ணோடு
உரசும் போது 
என் இதயத்தில்
ஒளிக்கீற்று...!

இதயத் துடிப்பு 
முன்பைவிட
வேகமாக துடிக்கின்றதே..,
அவனின் அழகிய 
குறும்பை கடைக்கண் 
கொண்டு நோக்கையிலே
சூரியனோடு வெண்ணிலா
காதல் கொண்டதோ....!

கண்கட்டி வித்தை காட்டி
என்னுள் நுழைந்து 
கொண்டாயே..,
கரம் கொண்டு தடுத்திட
முயற்சித்தேன் 
காற்றாய் மாறி
விரல்களுக்கிடையில் 
தவழுகின்றாய்..!

காற்றுக்கள் அனைத்தும்
உன்  பெயரை 
சுமந்து வந்து
ரீங்காரம் 
இடுகின்றது - என் 
காதினிலே..!

கோயில் கற்பக்கிரகத்தில்
இறைவனுக்கு பதில்
உன் முகம்..,
பாதத்தை 
மெதுவாய்
அடிவைத்து 
நடக்கின்றேன்
தரையில் காணும் 
மணல் துகல்களில்
உன் முகம்..,
இதற்கு பெயர் தான் 
காதலோ..!

காணும் அனைத்திலும்
உன் முகம்
கேட்கும் குரலனைத்தும்
உன் குரல்..,
ஒவ்வொரு நிமிடமும்
உன் பெயரையே 
வேதம் போல்
உச்சரிக்கும்
பேதையிவள்..!

Saturday, November 24, 2007

வலிக்குதடி..!


உன் கரத்தினிலே
நான் கண்ட காயம்
என் உயிரினிலே
வலிக்குதடி..!

காதல் செய்
உண்மைக் காதல்
என்றோ ஒருநாள்
உனை தேடி வரும்
உன் காதல் ஒன்றும் 
பொய்யுமில்லை
அருகில் இருந்து
கண்கொண்டு பார்த்தவள்
நான்..!

உன் உண்மைக் காதல்
அவனுக்கோ ஒரு
விளையாட்டு பொம்மை
நீயோ தவிக்கின்றாய்
அவனோ சற்றுமே
உன் நினைவே 
இல்லாமல் இருக்கையில்
நீ மட்டும் ஏனடி
உனையே நீ
காயப்படுத்தினாய்
என் நெஞ்சம் 
வலிக்குதடி..!

கரத்தோடு கரம் சேர்த்து

இனியவள்

உன் கண்களின்
கண்ணீரைத் துடைத்திட
இங்கேயோர் கை
உண்டு பெண்ணே..!

கண்ணீரைக் கலைத்திடு
கார்மேகமாய் 
உனக்காய்
ஓர் கரம் - என்றும்
உன் கரத்தோடு 
கைகோர்த்து
உன் சோகங்களைத் 
தாங்கிடும்
வாழ்நாள் 
முழுவதும்...!

Friday, November 23, 2007

தியேட்டர் நினைவு

இனியவள்

நீண்ட நாட்களுக்கு பிறகு
குடும்பத்துடன் படம்
பார்க்கச் சென்றேன்
அங்கே வரவேற்றது
உன் பழைய நினைவுகள்
என்னை......

நீ இல்லையே என்னருகில்
என்று மன அழுகையை
ஒரு புறம் தள்ளிவிட்டு
உள் சென்று நாற்காலியில்
அமர்ந்து கொண்டேன்......

திரையில் படம்
ஓடிக் கொண்டிருந்தது
மற்றவர்கள் சிவாஜி
பார்த்துக் கொண்டிருந்தனர்
நான் மட்டும் நீயும் நானும்
அன்று கண்களால்
பகிர்ந்து கொண்ட அன்றைய
நிகழ்வைக் கண்களில்
கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தேன்..!

உ(எ)ன் காதல்

இனியவள்

ரம்மியமான காலைப் பொழுதில்
நண்பர்கள் புடைசூழ ஜோதியாய்
சுடர்விட்டுக் கொண்டிருந்த
உன்னைக் கண்ட அவ்நொடி
என்னுள் பல கோடி
மின்சாரம் தாக்கிய ஓர் உணர்வு..!

நாமிருவரும் ஒரே வகுப்பில்
எதிரெதிரே அமர்ந்து
உன் கண்கள் என்னையும்
என் கண்கள் உன்னையும்
வட்டமிட அதனை கண்ணுற்ற
எம் நண்பர்கள் குறும்பினிலே
என்னில் அரும்பிய
வெட்கத்தைக் கண்ணுற்று
நீ கண் சிமிட்டிய நேரம்
என்னுள் பிறந்தது
உன்மேலான என் காதல்..!

தன்னந் தனியே
அந்தி மாலைப்பொழுதில்
கடவுளை தரிசித்து
ஆசிபெறச் சென்றவேளை
உன்னைக் கண்டு
என்னுள் ஓர்பூரிப்பு..!

நான் இவ்வூலகில்
அவதரித்த நாளன்று என்னுள்
அவதரித்த உன்னைக் கண்டதும்
உடலெங்கும் சந்தோஷ ரேகை
அரும்பியது என்னுள்...!

என் பிறந்த நாளுக்கு
வாழ்த்துச் சொல்வாய் என
காத்திருந்தேன்..!

காலங்கள் கரைந்தன
நாட்கள் நிமிடங்களாகவும்
மாதங்கள் நாட்களாகவும்
ஆண்டுகள் வாரங்களாகவும்
கரைந்தோடின எம்மிடையே...!

தேக்கி வைத்த அன்புகளை
இருவருக்கிடையே
இடம்மாற்றிக் கொண்டோம்
துன்பங்கள் எம்மைக் கண்டு
பயந்தோடின இன்பங்கள் எம்மை
அரவணைத்துக் கொண்டன
கனவினிலே...!

உறக்கத்தை வலிந்து
அழைத்துக் கொண்டேன் 
கனவில் நீ 
வருவாயென...!

நீ என்னருகில் இருக்கும் போது
இமைகள் இமைக்க மறந்தன
இமைகள் கூட தேவையில்லை
எனக்கு உன்னைப் பார்த்துக் கொண்டு
இருப்பதனாலே...!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு
மணித்துளியும் சொர்க்கத்தில்
இருப்பதைப் போல் உணர்ந்தேன்
சொர்க்கம் என்றால் இதுவா என்ற வினா
என்னுள் எப்பொழுதும்....!

சிரித்துக் கொண்டேயிருக்கும்
உன் கண்களைப் பார்ப்பதே
என் பொழுது போக்காய் ஆனது..!

தென்றல் வந்து இதமாய்
கலைத்து விட்டுச் செல்லும்
உன் கேசத்தை என் விரல் கொண்டு
சீராக்குவதில் எனக்கொர் தனி அலாதி 
நிழலினிலே...!

தென்றல் கலைக்கும் ஒவ்வோர்
விநாடிக்கும் தவம் இருக்க தொடங்கியது
என் இதயம்....!

உன் வாய்கள் உச்சரிக்கும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
எனக்கு வேத வாக்காக
போடி என நீ செல்லமாய்
கோபித்துக் கொள்வதும்
போடா குரங்கு என
நான் பதிலுக்கு சிணுங்குவதும்
எமது அன்பின் 
உச்சக் கட்டமல்லவா
எல்லாமே கனவாக..!

என் உடம்பில் உள்ள
ஒவ்வொரு துளி இரத்தமும்
உன் நாமத்தையே மந்திரமாய்..!

உச்சரித்த படி என்னை
உயிர்ப்பித்துக் கொள்கின்றது..!

சூரியன் மேற்கு நோக்கி
நகர்ந்து கொண்டிருந்தான்
நீ என்னை நோக்கி
அடி மேல் அடி வைத்து
வந்து கொண்டிருந்தாய்
அந்த அடியே என் வாழ்வில்
பேரிடியாக வந்து விழும் என
அறியாமல் அணு அணுவாய்
ரசித்துக் கொண்டிருந்தேன்.

காரணம் அறிய என் உயிர் துடித்தது
அவன் மெளனம் என் உயிர் வாங்கியது
அன்றைய சந்திப்பே எமது இறுதி
சந்திப்பு என்று அறியாமல்....!!

மொழி பெயர்ப்பாயா....?



என் உயிர் வாங்கி
உன்னுயிரைத் 
தந்தவனே
என்னிதயம் வசித்திட
உன் இதயத்தைத் 
தருவாயா..?

என் கண்கள் கண்ட
உன் கண்களை
என் கனவுக்குள் 
புதைத்திடுவாயா...?

கற்பனைகள் பல
கொண்டு காவியமென
உன்னைப் படைத்திட
எனக்குள் மொழி 
பெயர்ப்பாயா
உன் மெளங்களை...?

இலக்கற்ற பயணம்...!



உயிர் கொண்டாடிய
உறவுகள் தூரமாகிட
போலிப் புன்னகை
இதழைத் தாங்கிட
இதயத்தை அழுத்திடும்
துன்பங்கள் தீயென
உயிரைப் பற்றிட
கால்களை கண்கள்
தொடர கண்களைத்
தொடர்ந்து செல்கிறது
மனமும் இலக்கற்ற
பயணத்தை நோக்கி....!


உன் தரிசனம்..!




பெண்களுடனேயே படித்து
அவர்களுடனேயே என் 
வாழ்க்கை நகர்ந்த 
வேளையில் - உன் 
தரிசனம் கிடைத்தது..! 

சிறு வயதில் பார்த்த உனை 
மீண்டும் உன் அருகே 
கொண்டு வந்து சேர்த்த 
கடவுள் - உன்மீது 
காதலை வரவைத்து 
கண்ணாமூச்சி விளையாடி 
இறுதியில் உன்னுடன் 
சேர விடாமல் செய்ய 
எதுக்காக உன் வீட்டருகே 
எனை கொண்டு வந்து 
சேர்த்தாரோ..!!

*** ஏது.. ஏது.. ஏது.. ***

இனியவள்

உயிர் மரணித்த பின்பு
உணர்வுகளேது...!

கண்கள் மரணித்த பின்பு
காட்சிகளேது....!

ராகங்கள் மரணித்த பின்பு
இன்னிசையேது....!

மொழிகள் மரணித்த பின்பு
வார்த்தைகளேது....!

அன்பு மரணித்த பின்பு
காதலேது....!

!! மனதை வருடும் இன்னிசை !!

இனியவள்

நேரத்தோடு போட்டி போட்டு
காற்றென பறக்கிறது 
மனது பட்டாம் 
பூச்சியாய்..!

சிறகடித்துப் பறந்திடும்
மனதிற்கு கடிவாளமிட
வந்தவனே..!

வர்ணங்களோடு சேர்த்து
என் கனவுகளையும்
களவாடிச் சென்றதும்
ஏனோ...!

கண்மூடினால் அணைத்திடும்
தூக்கத்தில் கூட 
அணையாத - உன் 
நினைவுகள் அழைத்துச் 
செல்கின்றதே என்னை
நினைவுலகத்திற்கு..!

பனிமூடிய முகில்களாய்
பாதை தெரியாத பூக்களாய்
வலிகளின் நிழலில்
என்னைத் துவாளமிட்டதும்
ஏனோ...!

கனவினில் உன் முகம்
மின்னலென பளிச்சிட
தூங்கிய நினைவுகள்
உரசிய தீக்குச்சியாய்
விழிப்பதுமேனோ..!

ரோஜாக்களை ரசித்திட்ட
இதயம் இன்று
முற்களைக் கூட
ரசிக்கின்றனவே..!

கல்லுக்குள் ஈரமாய்
உன்மேல் இன்னும்
காதல் கசிகின்றதே
உன் மனதில் 
வேறொருவர் இருப்பது 
தெரிந்தும் கூட..!

நினைவு வலிகளை
நீ பரிசளித்துச் 
சென்றாலும் வலிகளில் 
கூட கசிகின்றது
மனதை வருடும் 
உன் மேலான
காதல்...!

!! சுமை தாங்காது !!

இனியவள்

ஓவியம் வரைவது போல்
வரைந்து சென்றுவிட்டாய்
காதலை என் இதயத்தில்...!

வர்ணங்கள் பல சேர்த்திட்டேன்
என்னுயிர் கொண்டு - காகிதமென
கிழித்துச் சென்றுவிட்டாயே
கண்மூடி கண்திறப்பதற்கிடையில்...!

கண்ணாடியாய் உடைந்திட்ட
இதயத்தின் இரத்தத் துளிகளின்
சுமை தாங்காது துடிதுடித்துக்
கொண்டிருக்கிறதே 
என் உயிர்...!

Thursday, November 22, 2007

கண்ணீர்...!




பூக்கள் கொண்டு மாலைகள்
தொடுப்பது போல்
கண்ணீர் கொண்டு
மாலை தொடுத்திட
முனைகின்றது கண்கள்...!!!

Wednesday, November 21, 2007

ஓடோடி வந்திடு..!

இனியவள்

உயிரென நான் 
உனை நினைத்திருக்கையில்
தூசென மிதித்துச்
சென்றதுமேனோ...!

உயிர்ப் பூவென மாறி
என் பாதம் பணிகையில்
கல்லென தூக்கி
எறிந்ததுமேனோ..!

மேகமென கண்கள்
மழையென கண்ணீர்
பொழிகையில் 
சாக்கடையென - முகம் 
சுழித்ததுமேனோ..!

விஷக் கிருமியாய் 
இரத்தமெங்கும் ஓடுதே - உன் 
பிரிவெனும் உயிர்க் கொல்லி நோய்
அன்பெனும் தடுப்பூசி
போட்டென்னை காப்பாற்றிட
ஓடோடி வந்திடு..!

கண்ணை மறைத்திட்ட
காதல் கத்தியென மாறி
உயிரைப் பறித்திட
துடிக்கிறதே அன்பே..!

கண்கொண்டு பார்க்க மாட்டாயா..!

இனியவள்

என்னிதயம் துடிக்கிறதே
ஓடோடி வா அன்பே...,
காட்டாறாய் கண்களிரண்டும்
கண்ணீர் வடிக்கின்றதே
உன் அன்பெனும் 
அணைகொண்டு அணைக்க 
மாட்டாயோ..!

உயிருக்கு தீ மூட்டி
துடிக்கின்றேன் - நீராய்
அணைத்திட 
வாராயோ..!

நிலவு கூட சுடுகிறதே
பேதையிவள் 
முகத்தை பார்த்து
உன் பூமுகம் கொண்டு
நிலவை குளிர்விக்க
ஓடோடி வந்து விடு..!

இறைவனிடம் 
வேண்டிக் கொள்வதே
என் உயிர் காற்று - உன் மடியில் 
போவதற்கே..,
அதற்கேனும் ஒருமுறையாவது
எனைக் கண்கொண்டு
பார்க்க மாட்டாயா..!

கரைந்தோடுகின்றது..!

இனியவள்


வெண்ணிலவின் 
துணை கொண்டு
நகர்வலம் போகின்றது 
இருண்ட வானம் 
பூகோலமெங்கும்...!

நினைவின் 
துணைகொண்டு
கரந்தோடுகின்றது 
ருண்ட - என் 
வாழ்வும்..!

வெட்டவெளி 
வானமாய்
கண்களிரண்டில் 
காட்சிகளின்றி
கரைந்தோடுகின்றது 
கோலங்கள்
கண்ணீராய்..!

!! கனவே கலையாதே.. !!



கண்கள் உள்ள வரை 
காற்றாய் நினைவுகளை 
சுவாசிக்கும் வரை - இதயம் 
துடிக்கும் வரை 
கனவே நீ கலையாதே....! 

காதலில் ஊடல் உள்ள வரை 
மேகத்தோடு துள்ளி விளையாடும் 
தென்றல் உள்ளவரை
நிலவோடு சண்டையிடும்
கனவே நீ கலையாதே..!

வாழ்வில் ஜீவன் உள்ள வரை 
இன்பத்தில் துன்பம் 
ஈழையோடும் வரை 
இதயத்தில் இளமை 
ததும்பும் வரை
மழையோடு கைகோர்த்து - வானவில் 
கோலம் போடும் வரை
கனவே நீ கலையாதே..!

காற்றோடு கதை பேசும் 
பூக்கள் உள்ள வரை 
என்னவனின் நினைவை
சுவாசிக்கும் வரை
கனவே நீ கலையாதே..!

!! நிலவாய்... !!

இனியவள்

மின்னலடித்திடும் உன்
பார்வையில் மழையாய்
பொழிகிறதே அன்பு வெள்ளம்
என்னுள்...!

இடியென உரத்துச் 
சிரித்திடும் - உன் 
செல்லச் சிரிப்பில்
கனியென கனிந்திடுமே
என்னிதயம்..!

சூறாவளியாய் என் 
இதயத்தில் நுழைந்து 
வெளிச்சப் புள்ளியாய்
நட்சத்திரமென மின்னி
நிலவாய் குளிர்விக்கிறாய்
என்னை...!

** ஏனோ....!! **

இனியவள்

மழைச்சாரலின் தூறலில்
மயிலிரகாய் வருடிச்செல்லும்
உன் நினைவுகள்
காலங்கள் கடந்த போதிலும்
வசந்த காலப் பறவையாய்
என்னைச் சுற்றியே
வட்டமிடுவதுமேனோ...!

செக்கச் சிவந்த செவ்வானத்தில்
தங்கமென ஜொலித்திடும்
கடற்கரையோரத்திலே
இருகரம் கோர்த்து 
நாம் நடக்கையில்
அலைகடல்கள் பின்னோக்கி
ஓடியதுமேனோ
கனவு தானே
என்று தானே..!

வெண்பஞ்சு தேகம் கொண்ட
முயல் குட்டிகள் துள்ளி
ஓடுகையில் உன் 
கண்களிரண்டும் - என்
கண்களோடு சில்மிஷம்
செய்ததேனோ...!

உன் மூச்சுக் காற்று - என்
மூச்சுக்காற்றோடு கலக்கையில்
என்னுள் உன்னிதயம்
படபடத்ததுமேனோ..!

நீ என்னோடு பேசுகையில்
மலர்களனைத்தும் நாணத்தில்
தலை சாய்ந்து
மெளன பாஷையில்
சஞ்சரிப்பதுமேனோ..!

என் விரலோடு உன் விரல்கள்
செல்லச் சண்டை பிடிக்கையில்
மேகங்கள் ஓன்றோடு ஒன்றுரசி
பன்னீர் தெளிப்பதுமேனோ..!

இது கனவு தான்
நிஞமல்ல - என 
நீயும் என்னை 
காயப்படுத்துகிறாயோ..!

Tuesday, November 20, 2007

!! கற் சிற்பம் !!



காயமாற்றிட உன்
அன்பை மருந்தாய்
மாற்றினேன் என்
உயிருக்கு - அதுவே
விஷமாய் என்னுயிரை
காற்றோடு காற்றாய்
மாற்றிச் சென்று விட்டதே..!

என் உயிர்க் காற்று
திசையறியாமல் உன்
மூச்சுக் காற்றை தேடி
தேடிப் பயணிக்கின்றது
துடுப்பிழந்த ஓடமாய்...!
வர்ணத்தில் கலந்திட்ட
நீராய் கலந்திட்டேன்
உன்னுள் நான்...!

இரும்பு கொண்டு
காந்தத்தை மணலில்
இருந்து பிரிப்பதைப்போல்
சுட்டெரிக்கும் உன்வார்த்தை
கொண்டென்னை 
பிரிக்க நினைக்காதே
திரிந்து போக
நானொன்றும்
கயிறல்லவே...!

நிஜத்தில் கூட
வலித்திருக்காதடா
நீ என்னை கனவில் 
திட்டுவது அவ்வளவு
வலிக்குதடா..!

கலைய கலைய 
சரி செய்யும்
மணல் சிற்பமல்ல
என் காதல்
உடைந்திட்டால் மீண்டும்
செதுக்க முடியா கற்சிற்பம்
உன்னோடான என் காதல்...!

!! குறுங்கவிகள் !!


உன் காலடிக்குள்
என் காலடியைத்
தேடித் தேடித் திரிகிறேன்
அகதியைப் போல்..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பனியிதழ்
முத்தத்திற்காய்
நான் ஓராயிரம்
ஆண்டு வரை
காத்திருப்பேன் - செல்லமே
நான் பிறந்த பலனை
உன்னால் அடைய...!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குடியை நீ குடிக்க
உன்னுயிரைக் 
குடிக்கின்றது
குடி..!

குறுங்கவிகள்.. !!


சிக்ரெட் எனும்
புல்லாங்குழலில்
மரணமெனும் கீதம்
இசைக்கலாம்...!

....~~~~.....~~~......~~~~.....~~~~......~~~~

தனிமையின் வெறுமையை
மழையின் இன்னிசையில்
கரைக்கின்றது உயிரை
வெளிச்சமாய்
கரைத்துக் 
கொண்டிருக்கும்
உன் நினைவு...!
.....~~~~......~~~~......~~~~.....~~~~


வர்ணப் பூவின் பின்னாலே
வர்ணங்களைத் தொலைத்த
இலைகள் என் காதலைப்
போலவே..!

வர்ணங்களோடு காட்சியளிக்கும்
இப் பூ சிந்துவது மகரந்த மணிகளா
இல்லையேல் இரத்தத் துளிகளா...

!! ஆலவேர் !!



நீ என்னைப் பிரிந்த போது

கூட மறந்து சென்று விட்டாய்

உன் நினைவுகளையும்

உன்னோடு அழைத்துச்

செல்வதற்கு..!


யார் சொன்னது எம் காதல்

தோற்றுவிட்டதென இன்றும்

ஆலமரமாய் வளர்ந்து

கொண்டு தான் இருக்கின்றது

உன் நினைவு என்னும்

உரம் கொண்டு..!


இணைந்த காதல் வெற்றி

பெறுவதுமில்லை

பிரிந்த காதல் 

தோற்பதுமில்லை...!

!! வாழ வேண்டும் !!

இனியவள்


காதலெனும் அரியாணையில்

ஆட்சி செய்யும் ராஜா நீ

உன்னை ஆளும் 

ராணி நான்...!


பூமித் தாயை அர்ச்சிகின்றன

பூக்கள் கொண்டு மரங்கள்

உன்னை நான் பூசிக்கின்றேன்

என் அன்பு கொண்டு..!


குழந்தை போல் தவழ்ந்து

செல்லும் தென்றல் இதமாய்

உன்னைத் தழுவிச்செல்ல

உன் கேசம் தவழ்ந்து

விளையாடுகின்றது உன்

நெற்றிப் பொட்டில்..!


நீ கடலைகளில் கால் நனைக்க

நான் நனைந்து கொண்டேன்

உன் அன்பு மழையில்...!


செல்லமாய் கோபம் கொல்லும்

உன் கண்கள் எதோ செய்தியை

எனக்கு சொல்லிச் செல்ல

அதனை என் விழிகள்

கவ்விக் கொள்கின்றன

இரையை கவ்வும் மீன் போல்...!


ஏழு ஜென்மங்கள்

வேண்டாம் எனக்கு

வாழ வேண்டும் 

இந்தப் பிறப்பில்

உன்னுடன் ஏழேழு 

ஜென்மத்துக்கும்

சேர்த்து...!

திசைகள் இன்றி..!

இனியவள்

நீ எனக்கு 
தந்து விட்டுச்சென்ற
நினைவுகளை 
வடிகளாக்கி
வடிக்கின்றேன் 
கவிதை...!

உன் முகம் மறந்து 
நினைவுகளை நான் 
மறக்க முயற்சிக்கையில்
காற்றில் பறக்கும் சருகாய்
உன் நினைவுகள் 
வட்டமிடுகின்றன
பருந்தாய்....!

குயிலாய் பாடித் 
திரிந்து பறந்தேன் - என் 
குரலை எனக்கு தெரியாமல்
களவாடிச் சென்று 
என் சிறகை உடைத்து 
விட்டாயே...!

உயிருள்ள சிலையின் 
உயிரை கவர்ந்து 
சென்று உயிரற்றதாய்
மாற்றி விட்டாய்....!
நீ திரும்பும் திசையெல்லாம்
திரும்பினேன் சூரியனைக் 
கண்ட தாமரையாய்
திசைகளின்றி பயணிக்க 
விட்டு விட்டாயே
என் வாழ்க்கைப் 
பயணத்தை....!

Monday, November 19, 2007

ஒரு தடவை..!

இனியவள்

மரணத்தை அணைக்கின்றாய்

தவழ்ந்து வரும் குழந்தையை

அணைப்பது போல்...!


இல்லாத உலகத்திற்கு போக

தவம் கிடக்கின்றாய்

இருக்கும் உலகை விட்டு...!


பிறப்பும் இறப்பும் 

ஒரு தடவையே

பிறந்த பயனை 

முழுமையாய் அடையாமல்

குறைப் பிரவசமாய் போகத்

துடிக்கின்றாயே தோழி...!

வாழ்க்கைப் பாடம்

இனியவள்

ஆறடி மண்ணுக்குள் போவதற்கு
துடிக்கின்றாயே உன்னை
துடி துடிக்க விட்டுச்
சென்றவனை நினைத்து....

ஒரு கணம் நில் பெண்ணே
உன் வாழ்க்கை - காதல்
என்னும் சக்கரத்தை மட்டும்
சுற்றி அமைக்கப் படவில்லையே....

பரந்து விரிந்து கிடக்கும்
பூமியெங்கும் இயற்கை
விரிந்து காட்சியளிக்கின்றது
மத்தளம் போல்....

மரம் பூவையிழந்து கனியைத்
தருகின்றது....

வானம் முகிலை இழந்து
மழையத் தருகின்றது....

விறகு தன்னை எரித்து
எமக்கு ஒளி தருகின்றது...

கற்கள் பல அடிகள் தாங்கி
அழகிய சிற்பமாய்
உருவெடுக்கின்றது....

ஒன்றில் இருந்து இன்னொன்றாக
உருவெடுக்கின்றது இயற்கை...

நீ மட்டும் ஏன் இழந்ததை நினைத்து
உன்னை இழக்கின்றாய்..

வாங்கும் வலிகளையும்
அடிகள் அனைத்தையும்
வாழ்க்கையின் பாடமாய்
ஏற்று உன்னை நீ மேம்படுத்து
அனைத்தும் உன் நன்மைக்கே
என நினை தோல்விகள் கூட
வெற்றிக்கனியாய் தித்திக்கும்.....

காதல் பாதையில்..!

இனியவள்

என் மீது மையல் கொண்ட
பூங்காற்றே இதயம் 
திறந்து உயிர் 
கொண்டு வரைகின்றேன்
ஓர் கடிதம்..!

துயில் கலைந்தாலும்

கலையவில்லையடா 
நேற்றைய இனிய 
மாலைப் பொழுது...!

என்னருகில் நீயிருந்தால்
கரைந்தோடும் நிமிடங்கள்
வருடங்களாய் போகிறதே..!


உன் ஓர் நொடிப் 
புன்னகையில் - என் 
வாழ்க்கைப் பாதையை
காதல் பாதையில் திசை
மாற்றி விட்டாயே..!

இடம் தந்திடு..!

இனியவள்

பசும் புல்வெளியில்
பூக்களின் நறுமணத்திலே
தென்றல் போடும் 
இன்னிசையில் உலகை 
மறந்த இன்பமான 
தூக்கம்..!

உன் பஞ்சனையில் 
எனக்கும் ஓர் இடம் 
தந்திடு இயற்கையே
துக்கம் மறந்து நிம்மதியாய்
உறங்கிட..!

!! முடிவிலி !!

இனியவள்

கனவுக்குள் நிஜமாய்

வாழ்கின்றாய்

நிஜத்தில் நிழலாகிப்

போகின்றாய்..!


மலர்களின் வாசம் போல்

என்னுள் உன் அன்பை

நிலைநிறுத்தி விட்டு

கானலாய்ப் 

போய்விட்டாய்..!


காகஎச்சங்கள் பல 

இடங்களில் விதைகளை 

விதைத்து செல்வதுபோல் 

என்னுள் - உன்

நினைவுகளை 

விதைத்துச்

சென்று விட்டாய்...!


முயன்று முயன்று

தோற்றுப் போகின்றேன்

உன்னை மறக்க முடிவிலியாய்

போய்க் கொண்டிருக்கின்றது

நினைவுகளோடு கூடிய 

வலிகள்..!

உன் முகம்..!



உன் தங்கையின்
நீராட்டு விழா சடங்கிலே 
நான் உன்னை 
அதிகம் விரும்ப 
ஆரம்பித்தேன்..! 

அன்று உன் வீட்டில் உன் பாத
செருப்பருகே - என்
பாத செருப்பினை 
கண்டதும் மனதில்
ஒரு பூரிப்பு
நீயே என் அருகில்
இருப்பது போன்று..! 

என் அறையில் 
இருந்தாலும் ஜன்னல் 
வழியேதேடுவது - உன்
முகம் ஒன்றே..! 

இன்று அந்த
முகத்தை நான்
என் மனக் கதவின்
வழியே பார்க்கிறேன்
ஆனாலும் நீ எனக்கு 
சொந்தமில்லை - இதை 
நினைக்கையில் என் உயிர்
வலிக்குதடா..!! 

அது ஏனடா....???

இனியவள்

அழகான அந்த 

நாட்களில் அன்பாகப் 

பேசிய வார்த்தைகள்

அமுதாக இருந்ததே

எனக்கு இன்று

அதே வார்த்தைகள் 

விஷமாகத் தெரிகிறதே

அது ஏனடா...!!


அன்று முற்களைக் 

கூட பூவாய் மாற்றிய 

உன் காதல்

இன்று பூவை முற்களாய் 

மாற்றுகின்றதே

அது ஏனடா....!!


இதற்கெல்லாம்

காரணம் - நான்

உன்னைப்

பிரிந்ததாலா - இல்லை

இன்னொரு பெண் 

உனக்கு

காதலியானதாலா....!

!! வாழ்வின் முகவரி !!


என்னை நினைக்க
மறந்தாலும் 
உனை நினைக்க
மறவேனே - காரணம்
என் வாழ்வின் 
முகவரி
நீயல்லவா...!

Sunday, November 18, 2007

!! ரசிகை நான் !!

இனியவள்

உயிரற்ற உருவங்கள் 
அனைத்தும் உயிர் பெறும் 
ஓவியனின் கை 
வண்ணத்திலே...!

துலங்கா பொருள் 
அனைத்தும் ஒளிவீசிடும் 
சிற்பியின் கை 
வண்ணத்திலே..!

இயற்கை அனைத்தும்
கவி பாடிடும் 
கவிஞனின்
கவியிலே..!

உன்னால் உருப்பெற்ற
கவி நான் உன்னைத் தவிர
வேறு யாரும் படித்திட
அனுமதியேன்..!

உன்னால் உருப்பெற்ற
அழகிய சிற்பம் நான்
உன்னைத் தவிர என்னை
மென்மேலும் செதுக்க
வேறு யாரையும் 
அனுமதியேன்..!

உன்னால் உருப்பெற்ற
ஓவியம் நான் 
உன்னைத் தவிர
வேறு யாரும் 
கண் கொண்டு
பார்த்திட 
அனுமதியேன்..!

கலைஞனே உன்னை 
கட்டிப் போட 
முனைகின்றேன் 
என்னைத் தவிர வேறு 
கலைகள் படைத்திடாது
என்னைத் தவிர 
சிறந்த ரசிகை
ஏன் உனக்கு..!

எல்லாமே கனவாக..!



உனை  அதிகம்

ரசிப்பதே - என்

யன்னல் வழியே   

உன் தம்பியிடம் 

அதிகம் கேட்பதே

உன்னை பற்றியே..! 


உனை உன் தந்தை

தண்டிக்கும் போதெல்லாம்

உனக்கு  வலித்ததோ  

இல்லையோ எனக்கு

வலித்ததடா..! 


உன் கூடவே உன்

கைபிடித்து நடக்க 

ஆசை- ஆனால்

என் வாழ்க்கையில்

எல்லாமே கனவாக

போனதே..!!

!! காதல் தேசம் !!

இனியவள்


என் குருதிக்குள் அணுவாய்

கலந்திருப்பவனே

உன் விழிகளை - நான்

ஆட்சி செய்வது 

அறியாமல்..!


உன்னை நான் 

தேடித் தேடி அலைகின்றேன் 

சூரியனைத் தேடும் 

தாமரையாய்.., 

காதல் என்னும் 

பூங்காவனத்திற்கு 

அழைத்து வந்த 

தேவதூதன் நீ

என்றும் ஜீவன்

எனக்கு நீ..!


காற்றில் தவழ்ந்து

கடலில் மிதந்து

காதல் என்னும்

தேசம் தேடி

போகின்றேன்

உடலாய் இருக்கும் 

உன்னிடம் உயிராய் 

வந்து கலந்திட...!


அன்னையின்

அன்பில் உலகை

மறந்திருந்த நான்

உன் அன்பில்

அன்னையையே மறந்து

காதல் என்னும் பூவில்

அன்பென்னும் தேன்

அருந்துகின்றேன்...!


வானத்தின் உச்சியில்

மிதக்கின்றேன் உன்னால்

என் காதல் உனக்கு

புரியாவிடில் 

விழுந்திடுவேன்

சிறகொடிந்த 

பறவையாய்..!

Saturday, November 17, 2007

!! திறந்து கொண்டது இதயம் !!

இனியவள்


கண் கொண்டு
கவி வடிக்கின்றேன்
உனக்காய் என்றும்..,
என் இதயத்தை 
களவாடி என்னை 
இதயமில்லாதவள்
ஆக்கி விட்டாயே..!

பூட்டியிருந்த இதயவாசல்
திறந்து கொண்டது
உன்னைக் கண்ட
நாள் முதல்..!

காணும் காட்சிகள் 
யாவும் கனவாய் மாற
நிழலாய் இருந்த நீ
நிஜமாய் மாறினாய்
எனக்குள்..!

கடிதம் எழுதுகின்றேன் 
உனக்கு முடிவில்லா 
தொடராய் முடியாமல் 
தொடர்கின்றது..!

உன்னைக் காணா 
நொடிகள் வலித்தாலும் 
உன் நினைவுகள்
வலியைக் கலைந்து
இன்பம் தருகின்றன..!

காத்திருக்கிறது காவியம்..!



மனதினை பாரம் அழுத்த

கிணற்று நீர் போல்

கண்களில் கண்ணீர்

குடி கொண்டது..!


எதிர்பாராமல் கிடைத்த

உறவு கண்ணிமைக்கும்

நேரத்தில் காணாமல்

போய் விடுமோ என

இதயம் பட படக்க

கண்களில் கண்ணீர்

அருவியாய் கொட்டியது..!


மரங்களில் இருந்து உதிர 

உதிர துளிர்க்கும் 

இலை போன்று - நீ 

விலக விலக உன்னில்

என் அன்பு மென்மேலும்

துளிர்க்கின்றது..!


என் இதயப் புத்தகத்தில்

உணர்வுகளை கவியாக்கி

உதிரத்தை மையாக்கி

நரம்புகளைப் பேனாவாக்கி

உனக்கென நான் வடித்த

காவியம் காத்திருக்கிறது

உன் பார்வைக்காய்..!

Friday, November 16, 2007

அன்புத் தோழி..!



உன் கண்ணீர் துடைத்திட
என் கரங்கள் இல்லை
உன்னருகில்..!

உன் இதயத்தின் சோகங்கள்
நீக்கி தோளோடு தோள்
கொடுக்க நான் இல்லை
உன்னருகில்..!

உன் கண்களில் கரைந்தோடும்
கண்ணீரில் கரைகின்றது
என் நிமிடங்கள்..!

தோழியே உன்னருகில்
நான் இல்லை என்னருகில்
நீ இல்லை..!

என் அன்பென்றும் உன்னையே
சுற்றி வட்டமிடும் பூமியைச்
சுற்றும் நிலவாய்...

என் மனக்கண் உன்னையே
நோக்கும் என்றென்றும்...
உன் மனம் தாங்கும் 
சோகங்கள் - என் 
இதயத்தைச் சேரட்டும்
உன் சோகங்கள் 
கரையட்டும்...!

தண்டை நீங்கி 
வாழாத மலராய் - நம் நட்பின்றி 
வாழாது என்
இதயம்..!

உருண்டோடும் உலகத்தில்
ஓவ்வொரு உயிர்களிலும்
துளிர்விடும் அன்பின் மேல்
ஆணையாய் உன் மீது நான்
கொண்ட அன்பு என்னுடல்
கல்லறை சென்றாலும் மாறாது
என்னுயிர் தோழியே..!

உன் சோகங்கள் கலைந்திடு
நாளை விடிந்திடும் விடியலில்
பறவைகள் சந்தோஷ 
கானம் பாடிட
மலர்களைனைத்து 
பூமாலை தொடுத்திட
இதமாய் வீசிடும் தென்றலில்
துன்பங்கள் பறந்திட 
உன் வாழ்வில்
இன்பங்கள் புத்துயிர் 
பெறட்டும்..!
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.