Thursday, February 28, 2008

எனதுயிரை


இமை மூடும் வேளையிலும்
கண் சிமிட்டிடும் - உன்
நினைவுகள் இசை மீட்டிச்
செல்கின்றன எனதுயிரை

நீ


விரல்களின் இடையினில்
சில்மிஷம் செய்திடும்
தென்றல் காற்றும் நீ

என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி ஆடிடும்
உயிரும் நீ

கவிதை வழியே


கண்கள் வழியே
தோன்றிடும் காட்சிகளனைத்தும்
கவிதை வழியே
கதறி அழுகின்றன....

உன் புன்னகை


சிரித்திடும் வேளையில்
மின்னலடித்திடும் - உன்
புன்னகை கண்டு
கண்ணீர் பொழிகின்றேன்
மழையென..

!! தெரியவில்லை.. !!



அமைதியே உருப்பெற்ற 
உன்னிடம் எப்படி 
வந்தது - இந்த 
அகங்காரம்...!

பூமாதேவியே 
நீயென பார்த்து
பொறாமைப்பட 
வைத்த - உன் 
பொறுமை எங்கே
நேற்று வந்த புயலில்
அடித்துச் செல்லப்பட்டு 
விட்டதா...!

அமைதியே வடிவான 
உன் திருமுகம்
இன்று அமைதியற்ற 
கடல் போல்
ஆர்ப்பாரித்துக் 
கொண்டு
இருக்கின்றதே...!

எதை மறைக்க 
போடுகின்றாய்
இந்த வேஷம் − உன்
மனதையா இல்லை
மனதை வருத்தும் 
வலிகளையா..,
காரணம் சொல் 
பெண்ணே - எந்த 
சுனாமி வந்து
உன் இதயத்தை
அடித்து சென்று 
விட்டது..!

மெளனம்


காற்றோடு கலந்த தூசு
கண்களுக்குள் சென்று
உறுத்துவது போல்..,
உனக்குள் கலந்த மெளனம்
என் இதயத்தை
நெருஞ்சி முள்ளாய் குத்துதடா..!

அழகிய சிற்பம்


உயிரைத் தெளித்து
அன்பைக் குழைத்து
செதுக்கிய அழகிய
சிற்பம் நீ

Tuesday, February 26, 2008

கண்ணீருக்குள்


உன்னனக் காண்கையில்
துடித்திடும் உயிரின் வலியை
அடக்குகின்றேன் கண்ணீருக்குள்

கனவென


கனவுகளின் காட்சி
விம்பத்தை - உன்
நிஜங்களில் தேடிப்
பார்க்கின்றேன்...
காணாமல் கலைந்து
போகின்றேன் கனவென.


Friday, February 22, 2008

நினைவுகளே


நினவுகளே நினைவுகளே
நெருங்கிடாதே - என்
நிஜங்களுக்குள்
நொருங்கி விடும்
என் இதயம்...

கடந்திடும் நிமிடங்கள்


கடந்திடும் நிமிடங்களில்
தொடர்ந்திடும் உன் நினைவுகள்...

சிரித்திடும் வேளையில்
கண்சிமிட்டிடும் உன் நிஜங்களில்
நிழலாகிப் போகின்றேன் நான் கண்ணீரில்...!

Thursday, February 14, 2008

உயிரோடு கலந்து விட்டாய்..!!



கற்பனைத் தந்திகளை 
மீட்டுகையில் கானமென 
இசைமீட்டிடும் கவிதை 
நீயெனக்கு....!

என் மூச்சுக் காற்றில் 
இதயத்தோடு கலந்து 
சில்மிஷம் செய்திடும் 
உயிரும் நீ...!

கண்மூடி திறக்கையில்
நிழலாடி வரும் 
ன் உருவம் காண்கையில் 
காணாமல் போகின்றது
கண்களில் கண்ணீர்த் 
துளிகள்...!

தித்திக்கும் கனவுகளில் 
திகட்டாமல் கண்சிமிட்டிச் 
செல்லும் கண்மணியே
கண்களைத் தீண்டி 
கனவோடு கலந்து
உயிருக்குள் நுழைந்து 
விட்டாய்...!

காதலர் தினமான
இன்று உன்னிடம்
என் காதலை சொல்ல
துடிக்கின்றேன் - ஆனால்
அதே காதலை நீயோ
வேறோருவருக்கு
கொடுக்கையில்- நானும்
என் காதலும் இன்று
உயிரற்ற சமாதியாக..!

நான் மறைந்தாலும்
என் காதலது வாழும்
உயிரோட்டமாய் 
கவிதை வரிகளாக 
அன்றாவது புரிந்து
கொள்வாயா இப்
பேதையவள் கொண்ட
காதலை - என்
செல்லப் பெயரே..!




என்னுயிரே


நேரம் பார்த்து வானம் நோக்கி
பூவிவள் தென்றலுனை
எதிர்பார்த்துக் காத்திருக்கையில்
நிலவென ஒளி வீசி
நட்சத்திரமென கண்சிமிட்டி
முகிலினில் துயில் கொள்ள
விளைகின்றாய் ஆருயிரே...!

இதழோர புன்னகை
குறு குறு பார்வை
படபடக்கும் உன் இதயம்
இவற்றுக்கு முன்னால்
பறந்து தான் போகின்றேன்
பட்டாம் பூச்சியென...

உன் இமைகள் உரசி
பூவென விரிந்து போனதடி
என் இதயம்...

காலம் கரைந்தது தெரியாமல்
சிலிர்த்துத் தான் போகின்றேன்
உன் புன்சிரிப்பினில்....

Wednesday, February 13, 2008

கவிதை கொண்டு


கண்களில் வழிந்தோடும்
கண்ணீரை கரங்கள் துடைத்திட.,
இதயத்தில் வழிந்தோடும்
வலிகளை கவிதை கொண்டு
துடைக்கின்றேன்.....!

இன்னொரு ஜென்மம்


உன் பார்வையில்
எத்தனை ஆழமடி
உன் இரு விழி உரசலில்
ஊசலாடி போனதே
என் உயிர்...

என் உயிரோடு
உன் உயிர்
சில்மிஷம் செய்கையில்
வலிக்கின்றதடி என் இதயம்...

கனவென நினைத்து
உதறித் தள்ளிய காலங்கள்
நிஜமென வந்து செல்கையில்
காணாமல் போகின்றது
என் மென்மை...

என் கோபங்களை இடியென தாங்கி
என்னை சிற்பமென செதுக்குகின்றதே
உன் பொறுமை......

இசையில் கரைந்திடும் கானக் குயிலே
கண்கள் மூடி நடக்கின்றேன்
முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில்
உனதன்பை பூவென
என் வாழியெங்கும் தூவி....

உன் உயிரினில் - என்
வலிகளை தாங்கிடும் என்னுயிரே
என்ன செய்வேன் உனக்கு
நான் என் உயிரைத் தருவதைத்
தவிர...

இன்னொரு ஜென்மத்தில்
நம்பிக்கையில்லை எனக்கு
இன்னொரு பிறவி இருந்து விட்டால்
உனக்கே குழந்தையாகும் வரம்
கிடைத்திட வேண்டிடுவேன் இறைவனை...

பொய்களின் அஸ்திவாரத்தில்..!


பொய்களின் அஸ்திவாரத்தில்
புலம்பித் தவிக்கிறது 
காதல் குழந்தை...


கண்ணுக்குள் உன்னை குடியிருத்தி
பார்வையற்றவளாய் வாழ்ந்து
உன் பிரிவால் உண்டான
பார்வையின் வெளிச்சம்
என் உயிரை கூசச் செய்கின்றதே....

உன் நினைவுகளின்றி
கரைய மறுத்த இரவுகள்
உன் நினைவுகள் கலையாமல்
கரைய மறுக்கின்றது
சூரியனில்....

தாலாட்டென தாலாட்டிய
உன்னோடான கனவுகள்
இன்று என் தூக்கம் கலைத்து
துக்கத்தில் தள்ளுகின்றனவே
என் இனிமைகளை....!

உயிர் கரைந்தாலும் கரைந்திடாத
உன்மேலான என் காதலை அன்பே
என் உணர்வு கொன்று
கலைக்க முயற்சிக்கின்றாயே...!

உன் நிழலில் வாழ்ந்திட்ட உயிரிது
உன் நிழலின்றித் தவிக்கின்றது
அனலென உன் நினைவுகள்
என்னைத் தாக்கும் போது...!

Tuesday, February 12, 2008

ஜொலிக்கின்றேன்


என் வானத்தில் ஓரு நொடி தோன்றி
மறைந்திடும் வானவில்லல்ல நீ
என் இன்பத்தில் மிளிர்ந்து
என் சோகத்தில் பொலிவிழந்திடும்
வெண்ணிலவு நீ.....

எனது தூக்கத்தில் வளர்ந்திட்ட
அழகிய கனவு நீ....

என் நடைபாதையில் துணைவரும்
தென்றல் காற்றும் நீ...

என் இதயத்தின் வழியே நுழைந்த
உன் நட்பு என் கண்களின் வழியே
கண்ணீரென பாய்கின்றதே
உன் மெளனம் தாங்காது....

உன் மேல் துளிர்த்திட்ட அன்பு
வானமென வளர்ந்திட
உன் கோபத்தில் தேய்ந்து போகின்றேன்
பெளர்ணமி நிலவென...

மழை நீரென என்னில் பொழிந்து
என் வாழ்வை பசுமையாக்கியவனே
பார்வையற்றுப் போகின்றேன்
உன்னைக் காணாத நாட்களில்....

காலைநேர பனித்துளி சூரியனின் ஓளிபட்டு
வைரமென ஜொலிப்பது போல்
உனதன்பு பட்டு நான் பிரகாசிக்கின்றேன்
இருளிலும் ஓளியென....

Monday, February 11, 2008

உன் மெளனம்


அன்புக்கேது அளவுகோல்
அளந்தளந்து அன்பு வைத்திட....

நிலவு தேய்ந்திட
வானம் அழுவதில்லையே - நீ
தேய்வதால் நான் அழுகின்றேன்......

தேய்ந்திட்ட நிலவு வளர்ந்திட
மலர்ந்திட்ட பூ வாடியதே
உன் சினம் கண்டு.....

மழை நீரென அன்பை நீ பொழிந்திட
சிலிர்த்துப் போகுதே எனதுயிர்....

கனிந்திட்ட பழமென இனித்திடும்
உன் புன்னகையின் தித்திப்பில் என்னிதயம்....

என் பூவாசல் தேடி வந்த தேவதையே
உன் அன்புக் கனிகளை
மரமென விதைத்திடு என் மனதினிலே
என் ஆயுள் முழுவதும் புசித்திடுவேன்...

என் தேகம் தீண்டிடும் தென்றல் காற்றே
என்னுயிரின் தேகம் தீண்டி வந்தாயா
என் ஆருயிரின் ஸ்பரிசம் உன் தீண்டலில்.....

பூக்களே பூக்களே - என்
கவிதையில் மலர்ந்திட்ட பூக்களே
என்னவள் கூந்தலில் அடைக்கலம் தேடுங்கள்
உயிர்த்திடுவீர்கள் என்னவள்
தொடுகையில்....

உன்னோடு நான் பேசியதை விட
உன் மெளனத்தோடு இரண்டறக் கலந்தது
அதிகமன்பே...

உன்னை விட - உன்
மெளனம் பிடிக்குமெனக்கு
என்னை அனுஅனுவாய்
சித்திரவதை செய்வதால்...

அதில் கூட சுகமுண்டு உயிரே
என் உயிரே நீயாகி போனதால்.....

என் கண்மணியே


உன்னைக் காண்கையில்
காணாமல் போய்விடும்
என் சோகங்கள்...

உன்னை காணாமல் தவித்திடும்
என்னிரு விழிகள்....

உயிரால் உன்னைத் தேடி
இதயத்தில் பாதுகாக்கின்றேன்...

பிரிவுகளின் நிழலில்
சோகத்தின் பிடியில்
தத்தளித்த என்னை
இசையென மாற்றி
இன்னிசை பாடிட வைத்திடும்
என் கண்மணியே
நீயின்றி விடிந்திடாது
என் இரவுகள்
நீயின்றி தூங்கிடாது
என் விழிகள்....

உன்னோடு நான் பேசிய வார்த்தைகள்
எனக்குள் என்னை உருமாற்றி
உனக்குள் என்னை
நிலைநிறுத்திடும் என்றென்றும்...


என்னை உனக்குள் தேடி
உன்னை எனக்குள்
கண்டு கொண்டேன்...

உன் கண்களின் வழியே


குறைகளோடு என்னை
ஏற்றுக் கொள் அன்பே....

நிறைகுடமென தளம்பாமல்
காலம் முழுதும் உன் உயிரினில்
குடி கொண்டு -உன்
கண்களின் வழியே
இவ் உலகத்தை ரசிக்கின்றேன்....
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.