Monday, December 17, 2007

அழகிய ஓவியம்..!

இனியவள்

எனக்குள் நீ விதைத்த
நம்பிக்கை ஒளிக்கீற்று
விண்ணளவு வளர்கின்றது
கனவாக..!

வாழ்க்கை பற்றிய 
கனவுகள் வானவில்லென 
கோலமிட்டு மின்னலென 
பளிச்சிடுகின்றது..!

நீ புதைத்த 
சோகங்கள் எனக்குள் 
உறங்கி என்னில்
துளிர்த்த இன்பங்கள்
உனக்குள் துள்ளி 
விளையாடுகின்றது..!

உன்னோடு கரைந்த 
நிமிடங்கள் ஒவ்வொரு 
பூக்களென பூத்து
பூங்காவனமென பூத்துக்
குலுங்குகின்றது - இன்பங்கள் 
வண்ணத்துப் பூச்சியென
சிறகடித்துப் பறக்கின்றது..!

உன்னோடு கலந்து விட்ட 
வாழ்க்கையிது - இன்பங்கள் 
பகிர்ந்து துன்பங்கள் 
துடைத்து புன்னகைகள் 
பரிமாறிக் கொள்ளும்
அழகிய வாழ்க்கைப் 
பயணம்...!

இதயம் போடும் 
ஆனந்தக் கூச்சல் - கண்கள் 
போடும் சந்தோஷ கோலம்
வாய்கள் முணுமுணுக்கும் 
மெல்லிசை அனைத்தும் 
உன் (நம்) பெயரே..!

என் நினைவுகள் - உன்
நினைவோடு கலக்க
என் நிஜங்கள் - உன்
நிஜங்களைத் தேடித்தேடி 
அலைகின்றது..!

என்றாவது ஒருநாள் 
என் கண்கள் உனை
சந்திக்கும் நேரம் 
அழகிய ஓவியமென
எம் நினைவுகளை
பரிசளிப்பேன் - கவிதை
தொகுப்பாக..!

Sunday, December 16, 2007

உயிரின் தவிப்பு..!



வா என்கின்றாய்
வருகின்றேன்..,
போ என்கின்றாய்
போக மறுக்கின்றேன்..!

நிஜத்தைத் தீண்டாமல்
நிழல் கூட வாழ்ந்திடும்
கண்மணியே - உன்
நிழலைத் தீண்டாமல்
இந்த நிஜம் வாழ்ந்திடாது
என் கண்ணின் மணியே..!

உன் மனதின் நிலை
புரியாது தவிக்கின்றது
என் உயிரிங்கு - உன் 
துன்பம் துடைத்திட
துடிக்கிறது என் இதயம்..!

உன் உயிரின் துடிப்பு
என் உயிர் அறிந்தது - ஆனால்
என் இதயத்தின் தவிப்பு
நீ அறிய மாட்டாயா..!

உன்னைக் காணாது
தவித்திடும் என்
கண்களுக்கு நிலவென
ஓளி வீசிடு என் அன்பே..!

உன் புன்னகை 
தரிசிக்காது - என் 
இமைகள் மூட 
மறுக்கின்றது - உன் 
கலகலப் பேச்சுக் 
கேட்காது - என் 
செவிகள் இனிமையை
இழந்து தவிக்கின்றது..!

வந்து விடு என் அன்பே
என் அன்பில் உன் அன்பைக்
கலந்து என் உயிரின் 
தவிப்பை அடக்கிடு 
அன்பே உன் ஓரப்
பார்வையால்..!

என்றும் என் உயிரில் 
கலந்து - என் 
இதயத்தில் குடியிருப்பவனே
ஒருமுறையேனும் - உன்
தரிசனம் கிடைக்கதா
என ஏங்கும்
பேதையிவள்..!

Sunday, December 9, 2007

!! கல்லறையில் வாழ்கின்றது !!


நினைவுகளில் தீக்குளித்து
நிஜத்தினிலே உயிர்க்கின்றேன்
பீனிக்ஸ் பறவையென..!

சிலிர்த்த ஆசைகளைனைத்தும்
செல்லரித்துக் கிடக்கின்றன
இதயத்தினிலே..!

கண்களை கண்ணீர் வசீகரிக்க
இதயத்தை சோகங்கள்
அணைத்துக் 
கொண்டதே..!

உன்னிடம் சொல்லாமலே 
இன்றும் என்றும்
கல்லறையில் வாழும்
என் காதல்..!

Saturday, December 8, 2007

சாந்தி தருவாயா.....?



காதலனே என் காதலனே
மெழுகாய் நான் உருகி
நிலவென ஒளிர்கின்றேன்
உன் இருளுக்குள்..!

அன்பே என் அன்பே
காதல் நான் செய்கையில்
எனக்குள் உன்னை
உருமாற்றுகின்றேன் 
என் குழந்தையாய்..!

என் வெட்கத்தினால்
என் ஆசைகளனைத்தும்
ஒளிந்து கொள்கின்றன
என் கண்களுக்குள்ளே...!

அன்பே உன் புன்சிரிப்பில்
பூலோகம் சாய்ந்ததே
கண்ணே உன் கனியமுதில்
என் இளமை பொங்கியதே..!

உயிரே என் உயிரே
என் உயிரை வாங்கும்
என்னவே - என் 
நிழலென வரும் உன் 
நினைவுகளை யாசகமாய் 
வாங்கிச் செல்லடா
உன் நிழலில் இருந்து கசியும்
இனிமைகளால் என் 
இதயம் நிம்மதியின்றி 
தவிக்கின்றதே..!

என்னிலிருந்து உனைப் 
பிரித்து - என் 
இதயத்திற்கு சாந்தி தருவாயா
என் அன்பே..!

Friday, December 7, 2007

பொக்கிஷம்..!

இனியவள்

பாலைவன வாழ்க்கை
பூஞ்சோலையெனெ மணம்
வீசியது அன்பே 
உன் மீது கொண்ட
காதலினால்..!

தண்ணீரின்றி தத்தளித்த
ஓடமாய் கண்ணீரில்
தத்தளித்த என் இரவுகள்
பன்னீரில் குளிக்கிறது
உன் மீது கொண்ட
காதலினால்..!

விடியலின்றி தவித்திட்ட
வானிலே விடிவெள்ளியென
பறவையாய் பறந்து வந்து
உயிரோட்டமாய் என் 
இதயத்திலே தவழ்கின்றாய் 
அன்பே..!

என் சோகத்தை 
கவிதையாய் வடித்து
இருளை விரட்டும் 
ஓளியாய் - என் 
சோகத்தை கவிதை
வடிவில் விரட்டி
என் மகிழ்ச்சியே
இது தான் என
வாழ்கின்றேன் - என்
அன்பே..!

கிடைத்தற்கரிய 
பொக்கிஷம்
உன் காதலெனக்கு
ஆயுள்வரை காத்திடுவேன்
என் உயிர் கொண்டு..!

இயற்கையோடும் நீ..!!

இனியவள்

வெட்ட வெட்ட 
துளிர்க்கும் மரம் போல் 
துளிர்க்கின்றது
உன்னோடான 
காதல்..!

பச்சைப் பசேலென்ற
மலைகள் போல் 
குளிர்கின்றது
உன் நினைவு..!

பூந்தோட்டத்தில் 
வண்ணமயமாய்
விரிந்திருக்கும் 
பூக்கள் போன்ற
உன் கண்கள்..!

சிணுங்கி விட்டுச் 
செல்லும் 
தென்றல் போல் 
உன் மூச்சுக் காற்று..!

இசைக்கேற்று 
அசைந்தாடும்
மரங்கள் போன்ற
உன் ராஜ நடை..!

காலை நேரச் சூரியனை
ஞாபகப் படுத்தும்
உன் அழகிய முகம்..!

நட்சத்திரங்கள் 
உயிர் பெற்று வந்ததோ 
பூமியில் என
அதிசயிக்க வைக்கும்
உன் புன்னகை..!

இறைவன் படைத்த 
அனைத்திலும்
நிழல்ஆடுகின்றது
உன் நினைவுகள்...!

Thursday, December 6, 2007

!! இனிய நினைவுகள் !!

இனியவள்

இதமான தென்றல் 
என் முகத்தில்
தவழ்த்து செல்கையில்
எனக்குள் ஊர்ந்து 
செல்கின்றது - உன் 
இனிய நினைவுகள்..!

அந்தி சாயும் வேளையில்
குழந்தையாக என் தோளில்
சாய்ந்திடும் உன் 
பொன் முகமதை
கண்டுவிட்டால் போதுமடா
என் கவலைகள்
மறைந்திடுமே..!

உன் செவ்விதழ் திறந்து
என் பெயர் சொல்லி 
அழைக்கையில் - என் 
இதயம் தவம் கிடக்கின்றது
உன் வார்த்தையை 
இசையென மாற்றிட..!

கனவில் என்னைக் 
கிச்சுக் கிச்சு மூட்டிடும் - உன் 
பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தால்
நாணிச் சிவந்த - என் 
கன்னத்தை இமைக்காமல் 
பார்த்து ரசிக்கும்
உன் கண்ணின் 
குறும்பு பிடிக்கும்..!

மழையென பொழிந்திடு..!



மேகமே..,
எனக்கென
ஓரு முறை
என் மீது மட்டும்
மழையென பொழிந்திடு..,
உன்னில் 
நனைந்து - என் 
சோகத்தை 
துடைத்துக் 
கொள்கின்றேன்...!

Wednesday, December 5, 2007

!! இருண்ட வாழ்வு !!

இனியவள்


மேகங்கள் ஒன்றுக்குள் 
ஓன்று மறைவது போல்
துன்பத்துக்குள் ஓளிந்து
கொள்கிறது இன்பம்..!

நீண்ட இரவுகள்
முடிவில்லா நினைவுகள்
விடிந்தும் விடியா கனவுகள்
தொலைதூர புன்னகை
இவையனைத்தும் எனது
அடையாளச் சின்னங்கள்..!

தீக்குச்சிப் பார்வையால் 
அன்று தெப்பமான 
என் மேனி தீயென 
எரிகின்றதே இன்று
தப்ப வழி ஏது
உன் கழுகுப் பார்வை
என்னைச் சுற்றி
வட்டமிடுவதனால்..!

இருண்ட வாழ்வுக்குள்
ஓளிவீசிய உன் அன்பு
இன்று இருளைக் கூட
காணமுடியாமல் 
கண்ணையும்
பறித்துச் சென்றுவிட்டது
என் அன்பே..!!

என்றென்றும் காத்திடுவேன்..!

இனியவள்

இனிமை எனை அணைக்க
தனிமை எனைக் கொல்ல
உள்ளத்தினிலே அலை மோதும்
காதல் வெள்ளத்தினிலே
கசப்புக்கள் அடித்துச் செல்ல
மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல்
என் இதயம் கண்ணீரிலே மூழ்க
என்னுயிர் தத்தெடுக்கின்றது
என்னவனை புத்தம் புது மலராய்..!

உன்மீது கொண்ட 
காதல் என்னுயிரிலே 
அனலைக் கக்க
தென்றலென வீசிடும்
காதல் - மேகமென
மழை பொழிந்திட
என் உள்ளம்
துன்பம் இன்பமெனும்
அலை கடலிலே
தத்தளிக்கின்றது..!

உன் உயிர் கொண்டு
காதலை உருக்கிடு
உன் இதயம் கொண்டு
அன்பை பூசித்திடு
என் காலமெல்லாம்
உன்னோடான காதல்
வாழட்டும் என்னுடன் - என
வாழ்த்திடுவேன் நான்
என்றென்றும்..!

நினைவிலும் கனவிலும்..!



தகமைகள் பார்த்து
வருவதில்லை அன்பு
மலர்களின் நிறங்களில் 
மனதை இழந்து வண்டுகள் 
பூவை நாடுவது போல்
உன் அன்பை என் உயிரால்
உணர்ந்து என்னை உனக்குள்
புதைக்கின்றேன் புதையலாய்..!

குழந்தையை உவகையோடு
அணைத்து முத்தமிடும் 
அன்னையாய் உன்னை 
அரவணைக்கின்றேன் 
நினைவிலும் கனவிலும்..!

கோடியாண்டுகள் செல்ல 
வைரமென ஜொலித்திடும் 
நட்சத்திரமாய் நிமிடங்கள் 
கரைய கரைய - என்
அன்பு மின்னுகின்றது
உயிராய் உன் உயிருக்குள்..!

உடைந்த கண்ணாடியாய்...!




ஒன்றாய் சேர்ந்து
சிரித்திடும் பொழுதினிலே
தெரியவில்லை வரும் காலம்
கண்ணீரில் கரைந்திடுமென..!

உன் வார்த்தைகள் 
ஓவ்வொன்றும் அழகிய 
பரிசுகளடா எனக்கு..,
பார்த்து பார்த்து 
ரசித்திடவல்ல
நினைத்து நினைத்து
தீயினில் எரிந்திட..!

அழகிய வாழ்க்கையென
நினைத்தேன் - ஆனால்
அலங்கோலமாகியது..,
கவலைகளற்ற வாழ்க்கை
இன்று உடைந்த 
கண்ணாடியாய்..!




ரசிக்க முடியவில்லை..!



பூக்கள் மேல் 
பன்னீர் தெளித்திடும்
மழைபோல்..,
வானத்தில் கோலம் 
போட்டுச் செல்லும் 
வானவில்லை போல்..,
கண்கள் ரசிக்க - உன்
விரல்கள் என் 
விரல்களோடு சில்மிஷம் 
செய்திட - நாணத்தில்
என் கால் கட்டைவிரல்
பூமியில் கோலமிடுவது போல் 
அன்று நான் கண்ட கனவு
அனைத்தும் இன்று 
என்னால் ரசிக்க
முடியவில்லை 
இதயத்திலே நீ
வலிகளின் ரேகைகளால்..!


Tuesday, December 4, 2007

அன்பு வெள்ளம்..!

இனியவள்

என் இதயத்தில் 
கரைபுரண்டு ஓடுகிறதே 
உன் அன்பு வெள்ளம்..
ஓருடலில் இரு உயிர் வாழும்
அதிசயமிது..!

உன்னைச் சந்திக்கும் போது
உணர்ந்ததில்லை இந்த
பாசப் பிணணப்பை
உணர்ந்த பின்
பிரிக்க முடியவில்லை
உறவை..!

பெண்மையின் மென்மை 
கண்டேன் - உன்
அரவணைப்பில்
என் சோகம் தீர்க்கும்
அன்பான தோழி நீ
எனக்கு..!

மேகங்களுக்கிடையிலே 
வெண்தாமரை நடுவினிலே 
மின்னலென பளிச்சிடும்
உன் புன்னகையிலே 
என் புன்னகை கண்டு
சிலிர்த்த என் உள்ளமெங்கும் 
பொங்கி வழிகிறது 
உன் அன்பு..!

Monday, December 3, 2007

!! உயிர் நாடியாய் !!

இனியவள்


காற்றில் பறக்கும்
காற்றாடியாய் 
பறக்கின்றது - உன் 
நினைவுகள்
என் மனதினிலே..!

வயலில் பூத்துக் குலுங்கும்
நெல் மணிகளாய் - உன்
புன்னகைத் துளிகள்..!

வயலின் இசை கேட்க
துடித்த காதுகள் - இன்று
உன் குரல் கேட்க
துடிக்கின்றன..!

மெளனம் கலையா இரவுகளை
உன் நினைவுகள் துயில்
எழுப்புகின்றன..!

வானத்தில் ஜொலிக்கும்
நட்சத்திரங்களுக்கு இடையில்
பன்னீர் சிந்தும் மழைத்துளியாய்
என் கண்ணீர்த் துளிகள்..!

உனைப் பார்த்த போது
தெரியவில்லை - பல 
இரவுகள் விடியா இரவுகளாய் 
மலரும் - உன் 
நினைவுகளிலேயென..!

விடியலை எதிர் நோக்கும்
சூரியன் போல 
இரவுகளை எதிர் நோக்குகின்றேன்
கனவு எனும் உலகத்தில் - என்
உயிர் நாடியாய் 
உன்னை சுவாசிக்க..!

காத்திருக்கின்றேன்..!

இனியவள்

இயற்கை அனைத்தும் 
மண்டியிடுகின்றது - உன்
அன்பின்பால் ஈர்க்கப்பட்டு..
என்பால் எப்பொழுது 
ஈர்க்கப்படுவாய்
இரும்பைக் கவரும் 
காந்தமாய்...!

அன்பே உன் இதயம் 
இரும்பல்லவே - உணர்ச்சிகள் 
கொண்டு செதுக்கப்பட்ட
அழகிய சிற்பம் அல்லவா..!

உணர்ச்சிகளுக்கு வேலிகள்
போட்டென்னை - சோகம் 
என்னும் நரகத்தில் 
தள்ளிவிடாதே..!

கண்ணை மூடி 
பால் குடிக்க நினைக்காதே
பூனைபோல் ஏமாறுவது 
நீ அல்ல நானே...!

வேலி என்னும் 
ஆடை பூண்டு
கருமேகமாய் 
காட்சியளிக்கின்றாய்
மழை என்னும் 
அன்பு பொழிந்து
எப்பொழுது 
வெண்மேகம் ஆவாய்..!

காத்திருக்கின்றேன் 
உனக்குள் பிறக்கபோகும் 
காதல் என்னும்
குழந்தைக்கு 
தாயாய் ஆவதற்கு...!

!! பேசும் விழிகள் !!

இனியவள்

உன் வார்த்தைகள் மெளனமாக
என்னோடு உறவாட - என்
மெளனங்கள் வார்த்தையாக
உருப்பெற உன்மேல்
உருவான காதல் 
உயிரோடு இரண்டறக் 
கலந்தன...!

உன் மெளனம் கலைத்து
ஒர் வார்த்தை பேசாயா
என காதுகள் தவம் இருக்க
நம் விழிகள் ஆயிரமாயிரம் 
வார்த்தைகள் பரிமாறிக் 
கொண்டன...!

நினைவு எனும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் 
கொண்டிருந்தன - இதயத்தின் 
துணையுடன்...!

என் உயிர் அவனோடு 
சங்கமிக்க அவன் உயிர் 
என்னோடு கலக்க
நம் உயிர்களை இடம் 
மாற்றிக் கொண்டோம்
கனவினில்..!

Saturday, December 1, 2007

நினைவுகளே..!

இனியவள்
இரவின் நிழலில்
சிறு ஒளியின்
குடையின் கீழ்
பூ பூக்கும்
நினைவுகளே..!

ஆர்ப்பாரிக்கும் 
அலைகளில் -அள்ளித் 
தெளிக்கும் 
நீர்க்குமிழிகள் போல்
வந்து வந்து செல்லும்
நினைவலைகளே..!

விட்டில் பூச்சியென
நினைவுத் தீயினிலே
என் கனவுகளை 
எரித்து சாம்பலென 
கரைக்கின்றேன்
கண்ணீரிலே..!
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.